லலித் - குகன் கடத்தல்; ஜனாதிபதியின் அழைப்பாணை செல்லுபடியற்றது

லலித் - குகன் கடத்தல்; ஜனாதிபதியின் அழைப்பாணை செல்லுபடியற்றது-Lalith Kugan Abduction-Summon on Gotabaya Rajapaksa Quashed by CoA-Lalith Kugan Abduction-Summon on Gotabaya Rajapaksa Quashed by CoA

- காரணம் குறிப்பிடப்படவில்லை

லலித் மற்றும் குகன் ஆகிய இரு சமூக ஆர்வலர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில், அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, நீதிமன்றில் ஆஜராகுமாறு, வழங்கிய அழைப்பாணை இரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் குறித்த வழக்கு விசாரணை தொடர்பில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் செப்டெம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புக் கருதி யாழ் நீதிமன்றில் ஆஜராக முடியாது என, மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இடைக்காலக் கட்டளை பெறப்பட்டது.

குறித்த அழைப்பாணைக்கு எதிராக, கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை அறிவித்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ஏ.எச்.எம்.பி. நவாஸ், மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இவ்வுத்தரவை அறிவித்தது.

இதன்போது, ஒரு வழக்கிற்கு அல்லது விசாரணைக்கு சாட்சிகளை அழைப்பதற்கு, நீதவான் நீதிமன்றிற்கு சட்டபூர்வமான உரிமை இருந்தாலும், அத்தகைய அழைப்பாணை அனுப்பப்பட்டதற்கான சரியான காரணத்தை சாட்சிக்கு தெரிவிக்க வேண்டியது நீதிமன்றத்தின் பொறுப்பாகும் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

குறித்த அழைப்பாணையில் அவ்வாறு அறிவிக்கப்படாத நிலையில், அதனை செல்லுபடியற்றதாக அறிவிப்பதாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டில் குறித்த காணாமல் போன சம்பவம் இடம்பெற்றபோது, அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட போதிலும், உரிய முறையில் காரணம் சுட்டிக் காட்டப்படாமை தொடர்பில் கவனத்தை செலுத்தியுள்ள எமது நீதிமன்றம், கௌவரமிக்க நீதவான் நீதிமன்றம் வழங்கிய அழைப்பாணையை வலுவற்றதாக மற்றும் செல்லுபடியற்றது என, நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

வீரராஜ் லலித் குமார் மற்றும் முருகானந்தன் குகன் ஆகியோர் அரசின் காவலில் இருந்தால் அவர்களை விடுவிக்கக் கோரி 2012ஆம் ஆண்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (Habeas Corpus)தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் இம்மனு மீதான விசாணையில், இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து 2012 செப்டெம்பரில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் குறித்த ரிட் மனு தொடர்பான விசாரணை ஆரம்பமானது.

இவ்விசாரணையில், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்குமார, குகன் முருகானந்தனின் மனைவி, லலித்குமார் வீரராஜின் தந்தை, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட சிலர் சாட்சியமளித்திருந்தனர்.

 

மனித உரிமைகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களான வீரராஜ் லலித் குமார் மற்றும் முருகானந்தன் குகன் ஆகியோர் உலக மனித உரிமை தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, கடந்த 2011டிசம்பர் 09ஆம் திகதி காணாமல் போயினர். அவர்கள் கடைசியாக யாழ்ப்பாணத்தில் உள்ள கைதடி பகுதியில் இருந்தமை தெரிய வந்துள்ளது.

லலித் மற்றும் குகன் ஆகியோர் 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னரும் அதற்குப் பின்னரும் வட மாகாணத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான தகவல்களை முன்னின்று ஆவணப்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...