சில் துணி வழக்கு; லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட விடுதலை | தினகரன்

சில் துணி வழக்கு; லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட விடுதலை

சில் துணி வழக்கு; லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட விடுதலை-CoA Acquit Lalith Weeratunga-Anusha Palpita Over the Sil Redi Case

சில் துணி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பிலேயே, அவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம்
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் வேளையில், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்குச் (TRC) சொந்தமான ரூபா 600 மில்லியன் நிதியில் நாட்டின் பல்வேறு பௌத்த விகாரைகளிலுள்ள பக்தர்களுக்கு 'சில்' (பௌத்த பக்தர்கள் வழிபாட்டின் போது அணியும் ஆடை) துணிகள் விநியோகிக்கப்பட்டதன் மூலம், அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தி மோசடி செய்ததாக, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

வழக்கு
இது தொடர்பான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதவான்  கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட வந்ததோடு, கடந்த 2017 செப்டெம்பர் 07 ஆம் திகதி அதற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பு (07.11.2017)
இதன்போது, குற்றச்சாட்டுகள் நிரூபணமாவதாக அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRC) முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகிய இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளித்தார்.

அதற்கமைய, மூன்று வருட கடூழிய சிறை, தலா ரூ 20 இலட்சம் அபராதம், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு தலா ரூபா 50 மில்லியன் நஷ்டஈட்டினையும் செலுத்துமாறு கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேன்முறையீடு (11.07.2017)
குறித்த இருவர் சார்பிலும் அவர்களது வழக்கறிஞர்களால், அத்தீர்ப்பை செல்லுபடியற்றதாக்கி, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்களை விடுவிக்குமாறு கோரி, கடந்த 2017 செப்டெம்பர் 11ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் 2 மேன்முறையீடுகள் மேற்கொள்ளப்பட்டது.

பிணை (20-11-2017)
அதனைத் தொடர்ந்து, அவர்களது மேன்முறையீட்டை கருத்திற்கொண்டு, அவர்கள் இருவரும், 2017 செப்டெம்பர் 20ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கறிஞர்கள்
லலித் வீரதுங்க சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெனாண்டோ, ஷாந்த ஜயவர்தன ஆகியோரும் அனுஷ பெல்பிட்ட சார்பில், காஞ்சன ரத்வத்த, ஜனக ரணதுங்க, துஷாரா சமன்மலி ஆகியோரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.


Add new comment

Or log in with...