ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்கள் 560 பேருக்கு VRS

நேற்று (16) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட 20 முடிவுகள்

- கடவுச்சீட்டுக் கட்டணம் அறவிடும் செயன்முறையில் திருத்தம்
- தேசிய மரபுரிமைகளை திட்டவட்டமாக அடையாளங் காண பொருத்தமான முறைமை
- மாந்தை சோல்ட் லிமிட்டட் 'தேசிய உப்பு கம்பனி' ஆக மாற்றம்
- பாடசாலை, முன்பள்ளிகளில் அஸ்பெஸ்ரோஸ் இற்கு பதிலாக சுற்றாடல் நேய கூரை

1. ஒன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகமும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலும்
'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' தேசிய கொள்கைப் பிரகடனத்தின் பத்து அம்சக் கொள்கைகளில் ஒன்றான 'மிடுக்கான தேசம்' (Smart Nation) எனும் நோக்கத்தை அடைவதற்காக ஓன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகம் மற்றும் அதற்குத் தேவையான வசதியளித்தல்களுக்கான மூலோபாயம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுவதுடன், அது தேசிய நிகழ்ச்சித்திட்டமாக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் இணைந்து இலங்கைக்கான ஓன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்தைத் தயாரித்துள்ளதுடன், அதன் ஒரு பகுதியாக இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்கும் கருத்திட்டம் அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ்க்காணும் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

  • குறித்த நிகழ்ச்சித்திட்டத்தைத் தயாரிக்கும் குழுவால் பூர்த்தி செய்யப்பட்டுள்ள இலங்கைக்கான ஓன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்திற்கான அங்கீகாரம்
  • இலங்கைக்கான ஓன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்தை நிறுவுவதற்குத் தேவையான வழிகாட்டல்களுக்காக ஜனாதிபதி செயலணியொன்றை நியமித்தல்
  • இலங்கைக்கான ஓன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டக கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பு இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்திற்கு ஒப்படைத்தல்
  • இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
  • இலங்கைக்கான ஒன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகமும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளுக்காக 1968 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கும்
  • குறித்த கருத்திட்டத்தை 2022.12.31 இல் பூர்த்தி செய்தல்.

2. டிஜிட்டல் மூலோபாயங்களை நடைமுறைப்படுத்தலும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்தை (ICTA) வலுப்படுத்தலும்
அரசாங்கத்தின் புதிய கொள்கைப் பிரகடனத்திற்கமைய 2020-2025 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்த வேண்டிய தேசிய டிஜிட்டல் கொள்கை மற்றும் மூலோபாயங்களைப் பரிந்துரை செய்யும் பொறுப்பு இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த நிறுவனத்தால் இலங்கைக்கான தேசிய டிஜிட்டல் கொள்கை மற்றும் மூலோபாயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அக்கொள்கை மூலம் கீழ்க்காணும் புதிய நிகழ்ச்சித்திட்ட அலகுகளைப் ஆரம்பிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
• டிஜிட்டல் அரசாங்கம் - இவ் அலகின் மூலம் அரச நிறுவனங்களில் டிஜிட்டல் பரிமாற்றச் செயன்முறையை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தல் அவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் பிரஜைகளை வலுவூட்டுவதற்கு நடவடிக்கையெடுத்தல்.
• டிஜிட்டல் பொருளாதாரம் - இயலளவு விருத்தி, புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்தல் மூலம் புத்தாக்குனர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் புதிய கம்பனிகளை ஆரம்பித்தல் மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்குத் தேவையான சூழலை உருவாக்குவதன் மூலம் கைத்தொழில் விருத்திக்குத் தேவையான வசதியளித்தல் இவ் அலகின் மூலம் மேற்கொள்ளப்படும்.
• டிஜிட்டல் சேவைகள் - அரச சேவைகளுக்கான தகவல் தொழிநுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கல், முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு செய்தல், டிஜிட்டல் பரிமாற்ற நிகழ்ச்சிகளை ஆரம்பித்துக் கொண்டு நடாத்துதல், போன்ற பணிகளுக்கான ஆலோசனை வழங்கல் போன்ற நடவடிக்கைகள் இவ் அலகின் கீழ் மேற்கொள்ளப்படும்.
அதற்கமைய, மேற்படி பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்புடைய வகையில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்தை மீள்கட்டமைப்பதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

3. ஆயுதங்கள் அரும்பொருட் காட்சியகம் அமைத்தல்
தொல்பொருள் அகழ்வுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற கல் ஆயுதங்கள் உள்ளிட்ட புராதன ஆயுதங்கள், சம்பிரதாயமாகப் பயன்படுத்தப்பட்டதும் தற்போது பாவனையற்றுப் போகும் ஆயுதங்கள் மற்றும் நவீன ஆயுதங்களை திரட்டிப் பேணுதல், பராமரித்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான முறையான வேலைத்திட்டம் அவசியமென அடையாளங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய, கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனையை கவனத்தில் கொண்டு தற்போது தேசிய தொல்லியல் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் மிகவும் பொருத்தமான அரும்பொருட் காட்சியகத்தில் பாதுகாப்பதற்கான வேறானதொரு அலகை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டுக் கட்டணம் அறவிடும் செயன்முறைக்கு ஏற்புடைய ஒழுங்குவிதிகளைத் திருத்தம் செய்தல்
1948 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கமைய 1956 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை சமகாலத்திற்கு ஏற்புடைய வகையில் திருத்தம் செய்வதற்காக 2018 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட திருத்தப்பட்ட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

5. இரத்மலானை பிரதேச செயலகத்திற்கான காணியை எடுத்தல்
தற்போது 26 பேர்ச்சஸ் காணியின் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் இயங்கி வரும் இரத்மலானை பிரதேச செயலகத்தில் நிலவும் இடவசதிப் பற்றாக்குறையாலும், குறித்த பிரதேச மக்களுக்கு உயரிய சேவையை வழங்கும் நோக்கிலும், செயலகத்திற்குப் புதிய கட்டிடம் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அடையாளங்காணப்பட்டுள்ள இலங்கைப் புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியின் 100 பேர்ச்சஸ் காணித்துண்டை இரத்மலானை பிரதேச செயலகக் கட்டிடம் அமைப்பதற்காக நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

6. பல்நோக்கு அபிவிருத்திப் பணி உதவியாளர்களைப் பயிற்றுவித்தல்
பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தால் பல்நோக்கு அபிவிருத்திப் பணி உதவியாளர்கள் 100,000 பேரை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு இணைத்துக்கொள்ளப்படும் அனைவரும் 25 துறைகளில் பயிற்சியில் ஈடுபடுத்தி தேசிய தொழிற் தகைமை 3 ஆம் நிலைக்கு (NVQ 3) பயிற்றுவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள 332 பிரதேச செயலகப் பிரிவுகளில், 5 1/2 மாத காலமும் ஒரே தடவையில் குறித்த பயிற்சியை வழங்குவதற்கு தேசிய பயிலுனர்கள் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

7. இலங்கையின் தேசிய மரபுரிமைகளை திட்டவட்டமாக தீர்மானிப்பதற்கும் அடையாளங் காண்பதற்குமான பொருத்தமான முறைமையை முன்வைத்தல்
இலங்கையின் தேசிய மரபுரிமைகளை திட்டவட்டமாக தீர்மானிப்பதற்கும் அடையாளங் காண்பதற்குமான பொருத்தமான முறைமையை இல்லாததால் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. அதனால் இலங்கையின் கலாச்சாரம் மற்றும் தனித்துவங்களை எடுத்தியம்பும் தொட்டுணரக் கூடிய (Tangible)) மற்றும் தொட்டுணர முடியாத (Intangible) தேசிய மரபுரிமைகளை அடையாளங்காண்பதற்காக மக்கள் கருத்துக்களைக் கேட்டறிந்து பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக கௌரர பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

8. அரச துறையின் ஊழியர் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்காக தீர்ப்புப் பொறிமுறையை அறிமுகப்படுத்தல்
தற்போது சில அரச ஊழியர்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் போராட்டங்கள், வேலை நிறுத்தம் போன்ற காரணங்களால் தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தனியார் துறையில் ஏற்படும் பிணக்குகள் மற்றும் வேலை நிறுத்தங்களைக் குறைப்பதற்காக 1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தாலும், அரச துறையில் அவ்வாறான பொறிமுறை இல்லை. 'சுபீட்சத்தின் நோக்கு' அரச கொள்கைப் பிரகடனத்தின் மூலம் தற்போதுள்ள தனியார் துறையின் ஊழியர் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக தீர்ப்புச் செயன்முறைக்கு ஒத்ததான செயன்முறையொன்று அரச துறை ஊழியர் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கு அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச துறையின் பிணக்குகளைத் தவிர்ப்பதற்காகவும் தீர்ப்பதற்குமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சம்மதங்கள், யோசனைகள், தலையீடுகள், தீர்த்தல் எனும் நான்கு அம்ச மூலோபாயங்களுடன் கூடிய பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்காக ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஏற்புடைய தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

9. வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் என்கொம்பாஸ் டிஜிட்டல் மீடியா லிமிட்டட் லண்டன் இடையிலான ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்
இலங்கை அரசாங்கமும் ஜேர்மன் குடியரசின் வானொலிச் சேவையான டொயிஸ்வெல் இற்குமிடையிலான 1980 ஆம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய திருகோணமலை ஒலிபரப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2012 ஆண்டு குறித்த ஒலிபரப்பு நடவடிக்கைகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வெளிநாட்டு ஊடகங்களுடன் இணைந்து ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிகழ்ச்சிகள் சிற்றலை மற்றும் மத்திய அலை ஊடாக ஒலிபரப்பவதற்காக லண்டனிலிருந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்கொம்பாஸ் டிஜிட்டல் மீடியா லிமிட்டட் இனால் வர்த்தக முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, ஒலிபரப்பு நிலையத்தின் அலைவரிசை நேரத்தை குறித்த நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் மாதாந்தம் 49,000 அமெரிக்கன் டொலர்கள் மற்றும் 16,000 அமெரிக்கன் டொலர்கள் அந்நியச் செலாவணியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு ஈட்டிக்கொள்ள முடியும். அதற்கமைய, திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பு நிலையத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் என்கொம்பாஸ் டிஜிட்டல் மீடியா லிமிட்டட் லண்டன் இடையிலான வானொலி ஒலிபரப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. கின் ஆறு மற்றும் நில்வளா ஆற்று நீரை திறம்பட பயன்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள கின் கங்கை மற்றும் நில்வளா ஆற்றுத் தடுப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
கின் கங்கை மற்றும் நில்வளா கங்கைகளில் முறையே, 2000 கனமீற்றர் மற்றும் 1200 கனமீற்றர் நீர் கடலுக்கு அடித்துச் செல்லப்படுகின்றது. குறித்த கங்கைகளின் மேலதிக நீரை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன நீர்ப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கும் குறித்த ஆறுகளின் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கும் கின் கங்கை மற்றும் நில்வளா ஆற்றுத் தடுப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆய்வுக் கற்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனை மற்றும் துரிதமாக கருத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டிய தேவையை கருத்தில் கொண்டும், உள்ளுர் நிதியைப் பயன்படுத்தி படிப்படியாக குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. மாந்தை சோல்ட் லிமிட்டட் கம்பனியின் பெயர் 'தேசிய உப்பு கம்பனி' என பெயர் மாற்றம் செய்தலும் வடபகுதியிலுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான அனைத்து உப்பளங்களின் உரிமை தேசிய உப்பு கம்பனிக்கு வழங்கல்
1990 ஆம் ஆண்டு உப்புக் கூட்டுத்தாபனத்தைத் தனியார்மயப்படுத்தி இலங்கை உப்பு கம்பனியை உருவாக்கி வடபகுதியிலுள்ள உப்பளங்கள் தவிர்ந்த ஏனைய உப்பளங்கள் குறித்த கம்பனியின் கீழ் கொண்டுவரப்பட்டது. பின்னர் 2001 ஆம் ஆண்டு மாந்தை சோல்ட் லிமிட்டட் எனும் அரசாங்கத்திற்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனியை உருவாக்கி வடபகுதியிலுள்ள அனைத்து உப்பளங்களின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்த நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 2020.10.06 திகதியில் வெளியிடப்பட்ட 2196/27 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மாந்தை சோல்ட் லிமிட்டட் நிறுவனம் மற்றும் ஆனையிறவு உப்பளம் அரச வியாபாரங்கள் 02 ஆக கைத்தொழில் அமைச்சின் விடயப்பரப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது. வடமாகாணத்திலுள்ள ஒவ்வொரு உப்பளங்களும் வௌ;வேறான வரையறுக்கப்பட்ட கம்பனிகளாக நடாத்திச் செல்வதை விட அனைத்து உப்பளங்களையும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தல் நிர்வாகம் மற்றும் பொருளாதார ரீதியாக நன்மையாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சமகாலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கைத்தொழில் அமைச்சின் கீழ் முழுமையான அரச உரிமைக் கம்பனியாக இயங்கும் மாந்தை சோல்ட் லிமிட்டட் நிறுவனத்தின் பெயர் 'தேசிய உப்பு கம்பனி' என மாற்றியமைப்பதற்கும், வடமாகாணத்திலுள்ள ஆனையிறவு உப்பளத்தின் உரித்து, நிர்வாக நடவடிக்கைகளை தேசிய உப்பு கம்பனிக்கு வழங்குவதற்கு கைத்தொழில் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12. ரோபோ தொழிநுட்பப் பயன்பாடு தொடர்பான சிறப்பு மத்திய நிலையத்தை தாபித்தல் (Centre for Excellence Robotic Application – CERA)
ரோபோ தொழிநுட்பப் பயன்பாடு தொடர்பான சிறப்பு மத்திய நிலையத்தை நிறுவுவதற்காக 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரச மற்றும் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கான ரோபோ தொகுதி மற்றும் வாகனங்கள் திட்டமிடல், மேம்படுத்தல் மற்றும் அதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான தொழிநுட்பப் பரிமாற்ற நிறுவனமாகச் செயற்படுவதற்கு இந்நிறுவனத்தை நிறுவுவதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையத்தின் பிரயோகங்கள் மூலம் உள்ளுர் கைத்தொழில் பலவற்றுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கும் நிறுவனத்தின் நீடித்த தன்மைக்கும் தேவையான நிதியை ஈட்டிக்கொள்வதற்கான வாய்ப்புண்டு. அதற்கமைய, 2007 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட கம்பனியாக ரோபோ தொழிநுட்பப் பயன்பாடு தொடர்பான சிறப்பு மத்திய நிலையத்தை தாபித்து அதனை நடாத்திச் செல்வதற்கு கைத்தொழில் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

13. பாடசாலை மற்றும் முன்பள்ளிகளின் கூரைத்தகடுகள் அஸ்பெஸ்ரோஸ் கூரைத்தகடுகளுக்குப் பதிலாக சுற்றாடல் நேயப் பொருட்களைப் பயன்படுத்தல்
தற்போது அனைத்து வiயிலான அஸ்பெஸ்ரோஸ் கூரைத்தகடுகளால் சுவாசப்பைப் புற்றுநோய் மற்றும் தொண்டைப் புற்றுநோய் ஏற்படுவதாக உலக சுகாதார தாபனம் மேற்கொண்டுள்ள ஆய்வுக் கற்கைகள் மூலம் தெரியவற்தள்ளது. அதனால், பாடசாலை மற்றும் முன்பள்ளிகளின் கட்டிடங்களுக்கான கூரைத்தகடுகள் அஸ்பெஸ்ரோஸ் கூரைத்தகடுகளுக்குப் பதிலாக சுற்றாடல் நேய கூரைத்தகடுகளைப் பயன்படுத்துவதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் முன்பள்ளி மாணவர்களை அஸ்பெஸ்ரோஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் அது அவர்களின் ஆரோக்கியத்திற்க நன்மை பயக்கக் கூடிய முக்கியமான படிமுறையாகும். அதனால், அஸ்பெஸ்ரோஸ் இனால் எதிர்கால சந்ததிக்கு ஏற்படும் தீய விளைவுகளை கருத்தில் கொண்டு, எதிர்வரும் காலங்களில் நிர்மாணிக்கப்படும் பாடசாலை மற்றும் முன்பள்ளிக் கட்டிடங்களுக்கான கூரைத்தகடு அஸ்பெஸ்ரோஸ் இற்குப் பதிலாக உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் ஓடு மற்றும் சுற்றாடல் நேய பதிலீடுகளைப் பயன்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

14. இலங்கை உரக் கம்பனிக்குச் சொந்தமான உரப் பரிசோதனை ஆய்வுகூடத்தின் உரித்தை தேசிய உரங்கள் செயலகத்திற்கு ஒப்படைத்தல்
இலங்கை உரக் கம்பனிக்குச் சொந்தமான உரப் பரிசோதனை ஆய்வுகூடத்தின் மூலம் உர மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தி குறித்த நிறுவனத்திற்கு சான்றிதழ் வழங்கப்படும். இலங்கை உரக் கம்பனி உர விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக நிறுவனமாக இயங்குவதால், மாதிரிகளைப் பரிசோதனை செய்யும் ஒழுங்குபடுத்தல் பணிகளை மேற்கொள்வது பொருத்தமற்றது என கண்டறியப்பட்டுள்ளது. அதனால், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உரப் பரிசோதனை ஆய்வுகூடத்தின் உரித்து மற்றும் அதற்குச் சொந்தமான அனைத்து அசையும் அசையாச் சொத்துக்களுடன் தேசிய உரங்கள் செயலகத்திற்கு ஒப்படைப்பதற்காக கமத்தொழில் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

15. சுபீட்சமான உணவு உற்பத்தித் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஆறு பயிர்களுக்கான உற்பத்திக்கான உதவிகளை வழங்கல்
உள்ளுர் விவசாயிகளை வலுவூட்டும் நோக்கில் 16 வகையான பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அரசாங்கத்தால் விதைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ள சோளம், மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் உழுந்து பயிர்களின் வருடாந்த நுகர்வுத் தேவையை உள்ளுரிலேயே பூர்த்தி செய்து கொள்வதற்காக குறித்த பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு விதைகளை விநியோகிப்பதற்காக அரச ஒத்துழைப்பை வழங்குவது உகந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, கமத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு 2020/2021 பெரும்போகத்திற்காக சோளம் ஒரு (01) ஏக்கருக்கும் மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் உழுந்து போன்றவற்றுக்கு ½ ஏக்கர் வரைக்கும் நடுகை விதைகளுக்கான 50மூ வீதமான மானியம் வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

16. இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய ஹிமாலயா நுண்ணுயிர் வளங்கள் தொழிநுட்ப நிறுவனம் விஞ்ஞான ரீதியான மற்றும் தொழிநுட்ப ஆய்வுகள் தொடர்பான கவுன்சிலுக்கம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய - இலங்கை கூட்டு ஆய்வு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 'அதிதொழிநுட்ப மரபணுப் பயன்பாட்டின் தேயிலைச் செடியின் மரபணு இயல்புகள் அடையாளங் காண்பதைத் துரிதப்படுத்தல் மற்றும் முக்கியமான மண் முகாமைத்துவமும் பயிர் உற்பத்தி தொடர்பான அறிவியல் அடிப்படையிலான இயல்புகளை அடையாளங்காணல் போன்ற இரண்டு வருடத்திற்கான ஆய்வுக் கருத்திட்டத்திற்காக இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு முன்மொழிவு கிடைத்துள்ளது. தேயிலை வகைகளை உற்பத்தி செய்யும் பணிக்காக செலவாகும் நேரத்தைக் குறைத்து வளர்ப்பு நிகழ்ச்சித்திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு தேவையான உயிரியல் ரீதியான கருவிகளைத் தயாரிப்பதற்கும் இவ் ஆய்வின் முக்கிய நோக்கங்களாகும். அதற்கமைய, குறித்த ஆய்வுக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய ஹிமாலயா நுண்ணுயிர் வளங்கள் தொழிநுட்ப நிறுவனம் விஞ்ஞான ரீதியான மற்றும் தொழிநுட்ப ஆய்வுகள் தொடர்பான கவுன்சிலுக்கம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

17. வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லயன்ஸ் கம்பனிக்கான முன்மொழியப்பட்ட தன்னார்வ ஓய்வு முறைமை
வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லயன்ஸ் கம்;பனி எதிர்கொண்டு நிதி நெருக்கடி காரணமாக தன்னார்வ ஓய்வு முறைமையை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆய்வுக் கற்கையை மேற்கொள்வதற்காக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளரின் தலைமையில் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவால் எதிர்வரும் 03 வருடங்களுக்கு செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்மொழியப்பட்ட தன்னார்வ ஓய்வு முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த ஓய்வு முறைமையின் கீழ் ஏறத்தாழ 560 பணியாளர்கள் ஓய்வு பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், அதற்காக, 1.46 மில்லியன் ரூபாய்கள் செலவாவதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஓய்வு முறைமையை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

18. எப்பாவெல, இராஜாங்கன, நொச்சியாகம மற்றும் கிரிபாவ நீர்வழங்கல் திட்டம்
முன்னிருந்த பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உப செயற்குழுவின் பரிந்துரைக்கமைய எப்பாவெல, இராஜாங்கன, நொச்சியாகம மற்றும் கிரிபாவ நீர்வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுவிஸ்சர்லாந்து கம்பனியிடம் விபரங்கள் அடங்கிய நிதிக்கணக்கு கோரப்பட்டுள்ளது. குறித்த கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட செலவு மிகவும் அதிகமானதெனத் தெரியவந்துள்ளது. அதனால், நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த கருத்திட்டத்தின் விடயப்பரப்பை திருத்தியமைத்து நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் தயாரிக்கப்பட்ட திட்டத்திற்கமைய இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கமைய உள்ளுர் நிதியைப் பயன்படுத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கான பராமரிப்பு மற்றும் அவசர பதிலளிப்புக் கப்பல் (MERV) கொள்வனவு
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கான பராமரிப்பு மற்றும் அவசர பதிலளிப்புக் கப்பல் (MERV) வாடகைக்குப் பெறல் தொடர்பாக 2020 ஆம் ஆண்டு யூலை மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததுடன், இலங்கை கடற்படைக்கு அவசர பதிலளிப்புக் கப்பல் (MERV) இனைக் கொள்வனவு செய்து குறித்த சேவைகளைப் பெற்றுக்கொள்வது பொருத்தமானதென அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, எரிசக்தி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, மற்றும் ஏற்புடைய அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் உடன்பட்டவாறு இலங்கை கடற்படை புதிய அவசர பதிலளிப்புக் கப்பல் (MERV) இனைக் கொள்வனவு செய்து அதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மிதக்கும் இரட்டைத் தொகுதிக்கு கப்பலை இணைப்புச் செய்வது, எரிபொருள் இறக்கும் நடவடிக்கை மற்றும் தேவையான வேறு சேவைகளை வழங்குவதற்கும் குறித்த கப்பலை கொழும்பு கப்பல் கட்டும் நிறுவனத்திடம் கொள்வனவு செய்வதற்கும் எரிசக்தி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

20. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு ஒதுக்கீட்டு விவாத நிகழ்ச்சிநிரல்
2021 நிதியாண்டுக்கான பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவு ஒதுக்கீட்டு விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட வரவு செலவு ஒதுக்கீட்டு குழு விவாத நிகழ்ச்சி நிரல் கௌரவ பிரதமர் அவர்களால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கமைய ஒதுக்கீட்டு விவாதம் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், வரவு செலவு இரண்டாம் வாசிப்பு 2020 நவம்பர் மாதம் 18 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி வரைக்கும், குழு விவாதத்திற்காக 2020 நவம்பர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் திசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 16 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு 2020 திசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடாத்துவதற்கும் அமைச்சரவை கருத்தில் கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...