தடையை தாண்டி வெளி மாகாணம் செல்வோர் தனிமைப்படுத்தலில்

தடையை தாண்டி வெளி மாகாணம் செல்வோர் தனிமைப்படுத்தலில்-Leaving from Western Province Prohibited-Will be Quarantined

- புகையிரதங்கள், பஸ்கள் பயண விபரங்கள் அறிவிப்பு

மேல் மாகாணத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளி மாகாணத்திற்குள் நுழையும் நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்து, அவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்,

தடை அமுலில் இருக்கும் காலகட்டத்தில், எவரேனும் ஒருவர் மேல் மாகாணத்திற்குள் நுழைந்தால், நவம்பர் 15ஆம் திகதிக்கு பின்னரே அங்கிருந்து வெளியேறலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இத்தடையை அடுத்து, சிலாபம் - கொழும்பு உள்ளிட்ட ஒரு சில பிரதான வீதிகளில் வாகன நெரிசல் நிலை காரணமாக, பொலிஸார் அவர்களின் போக்குவரத்து விபரங்களை அறிந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலிருந்து கொரோனா தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்படுவதால், அவர்களை வெளி மாகாணத்திற்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (11) இரவு முதல் உடன் அமுலுக்கு வரும்வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நள்ளிரவு வரை எந்தவொரு காரணத்திற்காகவும் யாரும் மேல் மாகாணத்தை விட்டு வெளியேற தடை விதிப்பதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்திருந்தார்.

அதன்படி, மேல் மாகாணத்திற்குள் இடம்பெறும் அனைத்து போக்குவரத்து சேவைகளும் மாகாணத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேல் மாகணத்திலிருந்து மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஆயினும், அத்தியாவசிய சேவைகளுக்காக மேல் மாகாணத்தை விட்டு வெளியேற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கான புகையிரத சேவைகளும் 15ஆம் திகதி நள்ளிரவு வரை இடைநிறுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆயினும் பெலியத்த, கண்டி, மஹவ, புத்தளம், அவிசாவளை ஆகிய நகரங்களிலிருந்து பயணங்களை ஆரம்பித்த புகையிரதங்கள், இன்று (12) காலை கொழும்பு, கோட்டை புகையிரத நிலையங்களை அடைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பிற்பகலில் கொழும்பிலிருந்து பயணிக்கும் புகையிரதங்கள் மேல் மாகணத்திற்குள்ளேயே பயணிக்கும் எனவும், அவற்றின் இறுதி நிலையங்களாக, அளுத்கம, அம்பேபுஸ்ஸ, கொச்சிக்கடை, அவிசாவளை வரை பயணிக்கும் என, புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளதோடு,

அத்துடன் மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள புகையிரத நிலையங்களில் ஏறும் பயணிகள் தங்களது உரிய புகையிரதங்களை அடைய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...