இலக்கியமாகவே வாழ்பவர் கவிஞர் செ. குணரெத்தினம்

அன்று முதல் இன்று வரை ஓயாத இலக்கியப் பயணம்

மட்டக்களப்பு வாவியும், வங்காளவிரிகுடாக் கடலும் சங்கமமாகும் முகத்துவாரம் பகுதியில் வாவிக்கரையோரமாக அமைந்திருக்கும் அழகிய இரண்டு கிராமங்களான மட்டிக்கழியும், அமிர்தகழியும் கவிஞரும் எழுத்தாளருமான செ. குணரத்தினத்தின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.

செல்லையா- பாக்கியம் தம்பதியருக்கு சிரேஷ்ட புத்திரனாக மட்டிக்கழி கிராமத்தில் பிறந்து வளர்ந்து, அயல் கிராமமான அமிர்தகழியில் திருமணம் செய்து வாழ்ந்து வரும் குணரத்தினம் பாடசாலையில் கல்வி பயின்று கொண்டிருக்கும் போதே கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.

ஆரம்ப காலங்களில் சித்திரம் வரைவதிலேயே இவர் கவனம் இருந்தது. எந்தவிதமான ஓவியப் பயிற்சியுமில்லாமல் பிரபலங்களின் உருவங்களையெல்லாம் தத்ரூபமாக வரைந்து பலரது பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு கிராமங்களிலுள்ள கோவில்களுக்கு திரைச்சீலைகளை வரைந்து கொடுத்து இவரது ஓவியத்திறமையை கிராமத்து மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினார். இது மாத்திரமல்லாது இவருக்கு இனிமையாகப் பாடக் கூடிய குரல் வளமும் இருந்தது.

குணரத்தினம் மலேரியா ஒழிப்பு ஓவசியராக வேலையில் சேர்ந்து கொண்டார். அக்கரைப்பற்றில் இரண்டு வருடங்கள் ஓவசியராகக் கடமை பாரத்துவிட்டு வந்து வாழைச்சேனைக் கடதாசி ஆலையில் எழுதுவினைஞராக சேர்ந்து கொண்டார். இந்த காலகட்டத்தில்தான் நிறைய எழுதி, தன் பெயரை இலக்கிய உலகில் நன்றாகப் பதிவு செய்து கொண்டார்.

காகித ஆலை நிர்வாகத்தினால் மாதா மாதம் வெளியிட்டு வந்த ‘காகிதமலர்’ சஞ்சிகைக்கு உதவி ஆசிரியராகவும் பணியாற்றி, கவிதை, கதைகள் எழுதி தொழிலாளர்கள் மத்தியில் பிரபல்யமாகிக் கொண்டார். தேசியப் பத்திரிகைகள் இவரது கவிதைகளை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கத் தொடங்கின. இதன் பிறகு கவிதையோடு சேர்த்து கிராமிய இலக்கியக் கட்டுரைகள், சிறுகதை, நாவலென்று எழுதிக் குவித்தார்.

இவர் எழுதிய கவிதைகளில் சிறு கதைகளில் பல பிரசுரமாகாமல் போயிருக்கின்றன. ஆனால் இவரால் எழுதப்பட்ட நாவல்களில் எந்த நாவல்களும் பிரசுரமாகாமலோ அல்லது பரிசு பெறாமலோ போனதில்லை. ‘ஷகலாவல்லி’ சஞ்சிகை நடத்திய குறுநாவல் போட்டி, வீரகேசரியின் மாதாந்தம் வெளிவந்த நாவல் தெரிவு என்று எல்லாவற்றிலும் இவரது நாவல்கள் தெரிவு செய்யப்பட்டன. இவை தவிர இலங்கையின் தேசியப் பத்திரிகைகளிலெல்லாம் இவரது தொடர் கதைகள் பல பிரசுரமாகியிருக்கின்றன. தமிழ்நாடு சுபமங்களா சஞ்சிகையும், கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது ‘துன்ப அலைகள்’ என்னும் நாவல் முதலாவது பரிசைப் பெற்று, இவரை ஒரு நாவலாசிரியர் என்னும் தரத்திற்கு உயர்த்தியது.

இதுவரையில் இவர் வெளியிட்ட நூல்களின் விபரம்

1. காவடிச் சிந்து (மட். மாமாங்கங் பிள்ளையார் திருத்தளம், களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயம், துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயம்)
2. செய்வதரிசனம் - நாவல் (இந்து காலாசார அமைச்சின் பரிசு)
3. ஒரு கிராமம் தலை நிமிர்கிறது (நாவல் - தமிழ்நாடு ரவி தமிழ்)
4. நெஞ்சில் ஒரு மலர் (கவிதைத் தொகுப்பு) வ. அ. இராசரெத்தினம்
5. நெஞ்சப் பூக்கள் (கவிதைத் தொகுப்பு – வட கிழக்கு மாகாண சபை)
6. விடிவுகள் அடிவானில் (சிறுகதைத் தொகுப்பு) அரச அச்சக் கூட்டுத்தாபனம்)
7. சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (குறுநாவல்- மட். சிவதாசன் வெளியீடு)
8. விபுலாநந்த பாவியம் (கவிதை) கனடா செல்வராசகோபால்
9. ஏழைநிலா (குறுங்காவியம்) ஈழத்துப் பூராடனார் வெளியீடு
10. துன்ப அலைகள் (குறுநாவல் கொழும்பு கலை இலக்கிய பேரவை வெளியீடு)
11. பக்கிரசப் பாமாலை (கவிதைகள்)

பெற்ற பரிசுகள்:
இதுவரை கவிதை. நாவல், சிறுகதை என்று 100க்கும் மேற்பட்ட பரிசுகள் இவை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்றவை

பெற்ற பட்டங்கள் :
இலக்கியமணி (மட்/ கலாசாரப் பேரவை)
தமிழ்மணி- இந்தகலாசார அமைச்சு– முன்னாள் அமைச்சர் செல்லையா இராசதுரையினால் வழங்கப்பட்டது.
இலக்கிய வேந்தனர்- மருதமுனை சமாதானம் சஞ்சிகை மருதூர் வாணனால் வழங்கப்பட்டது.
கலாபூஷணம், ஆளுநர்விருது, கவிமணி

‘அமிர்தசுழியான்’ இவரது புனைப்பெயர் இப்பெயரில் பல நகைச் சுவைக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடல்கள், நாடகங்கள்,உரைச் சித்திரங்கள் போன்றவற்றை நிறையவே எழுதியிருக்கின்றார். பல மேடைகளிலும் கவியரங்கில் பங்குபற்றியும் தலைமை தாங்கியும் உள்ளார்.

கொச்சிக்காய் மாப்பிள்ளை போன்ற தலைப்புகளில் நவீன நாட்டுக் கூத்துகளை எழுதி, பாடசாலையிலும், பொது மேடையிலும் மேடையேற்றியவர். பாதை மாறிய பருவங்கள் (இலங்கை இந்தியக் கலைஞர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்) படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

தன்னை ஊக்குவித்தவர்களாக வித்துவான் எவ். எக்ஸ். சி. நடராசா, மூத்த எழுத்தாளர் அன்புமணி (இரா. நாகலிங்கம்), மாஸ்டர் சிவலிங்கம், கவிஞர் காசி ஆனந்தன், ரீ. பாக்கியநாயகம் ஆகியோரை நினைவு கூருகிறார். எம்மத்தியில் இலக்கியமாக வாழ்ந்து வருபவர் மட்டக்களப்பு மண் தந்த இலக்கியவியலாளர் கவிஞர் செ. குணரெத்தினம் அவர்கள். அன்றிலிருந்து இன்று வரைக்கும் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர், கவிஞர் அவர்.

-செல்லையா பேரின்பராசா - துறைநீலாவணை நிருபர்


Add new comment

Or log in with...