ரிஷாட் பதியுதீனுக்கு நவம்பர் 13 வரை விளக்கமறியல்

ரிஷாட் பதியுதீனுக்கு நவம்பர் 13 வரை விளக்கமறியல்-Rishad Bathiudeen Re-Remanded Till November 13

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு போக்குவரத்து வழங்கியதன் மூலம், தேர்தல் விதி மீறல் மற்றும் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட 3 பிரதான சந்தேகநபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி அதிகாலை தெஹிவளையில் உள்ள எபினேசர் பிளேஸில் அமைந்துள்ள தொடர்மாடி வீடொன்றில் வைத்து ரிஷாட் பதியுதீன் எம்.பி. கைது செய்யப்பட்டார்.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன், 222 ​​இ.போ.ச. பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான குறித்த அமைச்சின் கீழிருந்த ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியமை ஆகிய பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1981ஆம் ஆண்டு இலக்கம் 15 ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82 (1) பிரிவுக்கு அமைய, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், மீள்குடியேற்ற திட்ட முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூவர், இவ்வழக்கின் பிரதான சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 தொற்று நிலை காரணமாக, சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை வழங்கினார்.

அது தவிர, ரிஷாட் பதியுதீன் எம்.பியின் வாகன சாரதிகள் இருவருக்கும் விளக்கமறியலை நீடிக்கும் உத்தரவையும் நீதவான் இதன்போது வழங்கியிருந்தார்.

அவர்கள் 5 பேர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிணை மனு தொடர்பில் அன்றையதினம் நவம்பர் 13ஆம் திகதி பரிசீலனை செய்யப்படும் என, நீதவான் இதன்போது அறிவித்தார்.ஷ


Add new comment

Or log in with...