இரு தரப்பினருக்கு இடையில் மோதல்; இளைஞன் பலி | தினகரன்

இரு தரப்பினருக்கு இடையில் மோதல்; இளைஞன் பலி

- சந்தேகத்தில் இருவர் கைது

புத்தளம், உ டப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4ஆம் வட்டாரத்தில் இரு தரப்பினர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளது.

உடப்பு 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கனகலிங்கம் ரமேஸ் (29) எனும் இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த குறித்த இளைஞர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்துள்ளதுடன், 14 நாட்கள் கொரோனா தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் எனவும், உடப்பு பொலிஸார் குறிப்பிட்டனர்.

உடப்பு நகரில் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற குறித்த  இளைஞருக்கும், மேலும் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதுடன், அங்கிருந்த இருவர் குறித்த இளைஞர் மீது கடுமையாக தாக்கி படுகொலை செய்துள்ளதாக, உடப்பு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.ஜி.சீ.ஆர். குணதிலக தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்றபோது சந்தேகநபர்கள் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் அவர் கூறினார். இத்தாக்குதலில் உயிரிழந்த இளைஞரின் சகோதரன் தற்போது உடப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த நபரின் சடலம் நீதிவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் இருவர் உடப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளளனர்.

இக்கொலை சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.ஜி.சீ.ஆர்.குணதிலக தலைமையிலான பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(கற்பிட்டி தினகரன் விசேட நிருபர் - ரஸ்மின்)
 


Add new comment

Or log in with...