அடிக்கடி வீதிக்கு வரும் யானை; பயணிகள் அசெளகரியம்

வவுனியா, புளியங்குளம் நெடுங்கேணி வீதியில்  புளியங்குளம் சந்தியில் இருந்து 600 மீற்றர் தூரத்தில் வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று (04) மதியம் 1.00 மணியளவில் குறித்த யானை வீதிக்கு வந்ததுடன், சில மணிநேரம் அப்பகுதியில் நடமாடியது.

இதனால் அவ்வீதி வழியாக போக்குவரத்து செய்த பயணிகள், வாகன சாரதிகள் எனப் பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

அவ்வப்போது மாலை வேளைகளில் குறித்த வீதிக்கு யானை வருவதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளதுடன், தற்போது மதிய வேளைகளிலும் யானை வீதிக்கு வரத் தொடங்கியுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதிக்கு வரும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த மின்சார வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பயணிகளும் அப்பகுதி மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

(வவுனியா விசேட நிருபர் - வசந்தரூபன்)


Add new comment

Or log in with...