முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்வு

பல தரப்பு கோரிக்கை விடுத்திருப்பதால் விசேட கவனமெடுப்பு

கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என பல தரப்பினர் விடுத்துள்ள வேண்டுகோள்களை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம் மக்களின் உடல்களை தகனம் செய்யவேண்டாம் என இந்த வருட ஆரம்பத்தில் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வைரஸின் இயல்பு குறித்து தெரியாததாலும் கொரோனா வைரஸ் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாகவும் வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஆறுமாத காலங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இது குறித்து மீள ஆராயப்படுவதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸினால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களை தகனம் செய்வது குறித்த முடிவை அரசாங்கம் தற்போது மறுபரிசீலனைக்கு உட்படுத்தியுள்ளது என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்


Add new comment

Or log in with...