அஷ்ரப் நகரில் காட்டு யானைகள் அட்டகாசம்

ஒலுவில், அஷ்ரஃப் நகர் குடியிருப்புப் பிரதேசத்திற்குள் காட்டு யானைகள் சில இன்று (02) அதிகாலை வேளையில் புகுந்து சேதம் ஏற்படுத்தியுள்ளதாக, பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

அதிகாலை மூன்று மணியளவில் புகுந்த இக்காட்டு யானைகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரவேசித்து மாந்தோப்பு, தென்னந்தோப்பு உள்ளிட்டவற்றுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன், யானை வேலிகள் சிலவற்றையும் நாசம் செய்துள்ளன.

பயன்தரும் மரங்கள் உள்ளிட்ட மேட்டுநிலப் பயிர்கள் மற்றும் மரம் செடி கொடிகள் பலவற்றையும் இக்காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. இச்சேதங்களை உண்டு பண்ணிய காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் தங்கியிருந்த பொதுமக்கள் சிலரையும் தாக்க முற்பட்டதாகவும், மயிரிழையில் தாம் உயிர் தப்பியதாகவும், பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர். 

சுமார் இருபதிற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நுழைந்து சேதப்படுத்தியதனால், சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகை தமக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும், குறித்த தோட்ட உரிமையாளர் தெரிவித்தார்.

இப்பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் தினமும் பல்வேறான பிரதேசங்களிலிருந்து கொண்டு வரப்படும் திண்மக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இக்குப்பை மேட்டில் கழிவுணவுகளை உட்கொள்ள வருகை தரும் காட்டு யானைகள், இரவுப் பொழுதுகளில் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உட்புகுந்து உப உணவுப் பயிர்ச் செய்கைகள், விவசாயச் செய்கைகள், மரம் செடி கொடிகள் போன்றவற்றை நாசம் செய்து வருவதுடன், தமது குடியிருப்புகளையும் சேதமாக்கி வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர் - ரமீஸ்)


Add new comment

Or log in with...