தங்களுக்கு போக்குவரத்து பிரச்சினைகள் எதுவும் இருப்பின், 077 1 056 032 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு, க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சைக் கடமையில் ஈடுபடும் பணிக்குழாமினரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர், சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக இவ்வறிவிப்பை விடுத்துள்ளார்.
குறித்த இலக்கத்தின் மூலம், போக்குவரத்து பிரதிப் பொது முகாமையாளரை தொடர்பு கொண்டு முறையிடலாம் என, அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சைக் கடமையில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு, இ.போ.ச. மற்றும் புகையிரத திணைக்களம் மூலம் விசேட போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் இடம்பெற்று வருவதோடு, நவம்பர் 06ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள 2,648 பரீட்சை நிலையங்களில் இடம்பெறும் இப்பரீட்சைகளுக்கு தோற்றுவதற்காக, நாடு முழுவதிலுமிருந்து 362,824 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment