நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் பாதிப்பு

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் கீழான நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள், மீன் ஏற்றுமதி இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இரணைமடு நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் கீழ் சுமார் 150 க்கும் மேற்பட்ட மீனவர்கள் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக் காரணமாக மீன் ஏற்றுமதி இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இரணைமடுக் குளத்தில் பிடிக்கப்படுகின்ற மீன்களில் பெரும்பகுதி தென் பகுதிக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக மீன் ஏற்றுமதி முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

இதனால் இரணைமடுக் குளத்தின் கீழ் பிடிக்கப்படுகின்ற மீன்கள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும், இதனால் தங்களுடைய தொழில் நடவடிக்கைகளை குறைத்து குறைந்த அளவிலேயே தற்போது மீன்களை பிடித்து உள்ளூர் வியாபாரிகளுக்கு வழங்கி  வருவதாகவும், இரணைமடு நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

(பரந்தன் குறூப் நிருபர் - யது பாஸ்கரன்)


Add new comment

Or log in with...