64 பொலிஸ் பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்கிறது

- மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தல் நடவடிக்ைககளுக்காக நாட்டின் 64 பொலிஸ் நிர்வாகப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் மீது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, மறு அறிவித்தல் வரை தொடர்ச்சியாக தனிமைப்படுத்தலுக்கான ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 14 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.  அதற்கான வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அதற்கு வசதியாக கம்பஹா மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் அரச, தனியார் வங்கிகள், மருந்தகங்கள் மற்றும் சதொச நிறுவனங்கள் நேற்று திறக்கப்பட்டு மக்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. எவ்வாறெனினும் அனைத்து மக்களும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பேணுவதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததுடன் பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று முன் தினம் முதல் நாட்டின் 64 பொலிஸ் நிர்வாகப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது கம்பஹா மாவட்டத்தில் 37 பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளிலும் குளியாப்பிட்டியில் ஐந்து பொலிஸ் பிரிவுகளிலும் கொழும்பில் 15 பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளிலும் களுத்துறையில் மூன்று பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளிலும் மற்றும் அதற்கு மேலதிகமாக வெல்லம்பிட்டிய, கொத்தட்டுவ, முல்லேரியா வெலிக்கட பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை ஒக்டோபர் 4ம் திகதி முதல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1076 பேர் கைது செய்யப்பட்டதுடன் 156 வாகனங்கனை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...