ஏழைகளின் அப்பிளான நெல்லிக்கனி | தினகரன்

ஏழைகளின் அப்பிளான நெல்லிக்கனி

‘ஏழைகளின் அப்பிள்’ என்றும் ‘ராஜகனி’ என்றும் போற்றப்படும் நெல்லிக்கனியானது அரிநெல்லி என்றும் பெரு நெல்லி அல்லது காட்டு நெல்லி என இரு வர்க்கங்களாக எமக்கு கிடைக்கின்றன. இதில் பெரு நெல்லி வர்க்கம் அதிக மருத்துவ குணம் கொண்டது.

நெல்லி இயுபோர்பியேசியே (Euphobiaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஓர் பழப்பயிராகும். இது சிறிய அல்லது நடுத்தர உயரமான இலையுதிர்க்கும் மர வகையைச் சேர்ந்தது. நெல்லி இலைகள் புளியமிலையை விட சிறிய இறகு வடிவமானவை. நெல்லியின் கிளைகளும் இறகு போன்ற தோற்றமுள்ளவை. ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை. நெல்லிக்காய்கள் கொத்தானவை, இளம் மஞ்சள் நிறமானவை, சதைப்பற்றானவை, உருண்டையானவை.

நெல்லியின் முக்கியத்துவங்கள்

பழப்பயிர்களில் அதிகளவு விற்றமின் சி கொண்ட பழமாக நெல்லி காணப்படுகின்றது. ஏனைய பழங்களில் உள்ள விற்றமின் சி போசணை வெப்பத்தினால் எளிதில் அழியக் கூடியது. ஆனால் நெல்லியில் எந்த சூழ்நிலையிலும் சிதையாமல் நீண்ட நாட்கள் பாதுகாக்கப்படுகின்றது.

100 கிராம் நிறையுள்ள பழங்களில் காணப்படும் விற்றமின் சி இன் அளவு (மில்லி கிராமில்)அன்னாசி- 0.12, தக்காளி- 32, எலுமிச்சை - 63, வாழைப்பழம்- 170, கொய்யா - 200, நெல்லி - 700.

இதன் இலை, பட்டை, வேர், பூ என அனைத்து பகுதிகளுமே மருந்தாக பயன்படுகின்றன. இலைக்கொழுந்து சீதக்கழிச்சலினைத் தடுப்பதற்கு பயன்படுகின்றது. பூ குளிர்ச்சியுண்டாக்கியாகவும் மலமிளக்கியாகவும் செயற்படுகின்றது. நெல்லி மர வேர் வாந்தி, சுவையின்மை ஆகியவற்றை குணப்படுத்தும்.

நெல்லிக்கனி கண்களுக்கு குளிர்ச்சி தரும். உணவுச் சமிபாட்டினைத் தூண்டும், சிறு நீர் பெருக்கும், குடல் வாயுவை அகற்றும், எலும்புருக்கி நோய், வாந்தி போன்றவற்றை குணமாக்கும். நெல்லிக்காய் வற்றல் இருமல், சளி போன்வற்றை குறைக்கும், உடலைப் பலப்படுத்தும். நெல்லிக்காய் தைலம் பயன்படுத்தினால் கண்கள் பிரகாசமாக இருக்கும், சொடுகு கட்டுப்படுவதுடன் தலைமுடி உதிர்தலும் தடுக்கப்படும்.

நெல்லி மரப்பிசின் பல மருந்துகளில் கூட்டுப்பொருளாக சேர்க்கப்படுகின்றது. நாள் முழுவதும் தங்களது வாழ்க்கையை நெல்லியோடு இணைந்து வாழ்ந்தவர்கள் நீண்ட ஆயுளோடும் கண்கள் அதிக பிரகாசத்துடனும் தேக ஆரோக்கியத்துடனும் வாழ்ந்துள்ளார்கள்.

இம் மரத்தின் நிழலில் நின்று இளைப்பாறி மரத்தின் காற்றை சுவாசித்தாலே நோய்கள் பறந்து போகும் என்று சொல்லப்படுகின்றது. இம் மரத்தின் நிழல் உடலுக்கு ஒரு வித குளிர்ச்சியை கொடுக்கும். அக் காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் அவர்கள் குளிக்க பயன்படுத்தும் நீர் நிலைகளில் நெல்லி மரக்கட்டைகளை போட்டு வைத்து இதில் குளிப்பதாகவும் சாப்பிடும் உணவு வகைகளில் அதிகமாக நெல்லிக்கனியினையும் சேர்த்துக்கொள்வதாகவும் இரவு தூங்கும் போது நெல்லி இலைகள் கொண்டு தயாரித்த படுக்கையில் துயில் கொள்வதாகவும் புராணங்களில் சொல்லப்படுவதுண்டு.

தற்போது நெல்லிப் பழச்சாறு உற்பத்தியும் விற்பனையும் மிகப் பிரபல்யமான ஒரு வர்த்தக நடவடிக்கையாக நடைபெறுகின்றது.

காலநிலை

மழை வீழ்ச்சி- வருடாந்த மழை வீழ்ச்சி 630 - 800 மில்லி மீற்றர் இப் பயிர்ச் செய்கைக்கு போதுமானது. வெப்பநிலை- நெல்லி ஒரு வெப்ப மண்டல தாவரமாகும். மூன்று வயது வரையான இளம் தாவரங்களை கடும் வெப்பத்திலிருந்து பாதுகாக்க நிழல் வழங்க வேண்டும். முதிர்ந்த தாவரங்கள்; 46'C வரையிலான உயர் வெப்ப நிலையிலும் தாங்கி வளரும்.

வர்க்கங்கள்

பனாரசி, சக்கயா, NA-4 (கிருஷ்ணா), NA-5 (கஞ்சன்), NA-6, NA-7, NA-10, BSR-1 (பவானிசாகர்) போன்ற வர்க்கங்கள் உலர் பிரதேசங்களுக்கு பொருத்தமானவை.

நடுகைப் பொருள்

விதை, ஒட்டு மற்றும் இழைய வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் கன்றுகள் நடுகைப்பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பெரிய காய்களை தரக்கூடிய இனங்களை ஒரு வருட வயதுடைய ஒட்டுக்கட்டைகளில் (பன்றுகளில்) ஒட்டுவதன் மூலம் கூடிய விளைவைத்தரக்கூடிய ஒட்டுக் கன்றுகளை நடுகைக்கு பயன்படுத்தலாம்.

நடுகை தொழிநுட்பம்

நடுகைக்காலம் - புரட்டாதி, ஐப்பசி மாதங்களில் நடுகை செய்வது சிறந்தது. நடுகை இடைவெளி – 15’ x 15’ நடுகைக்குழி - பருவகால மழைக்கு முன் நடுகைக்குழி தயாரித்தல். நடுகை மேற்கொள்ள ஒரு மாதத்திற்கு முன் நிலத்தை சுத்தப்படுத்தி உழ வேண்டும். 3’ x 3’ x 3’ நீள அகல ஆழத்தில் குழிகளை அமைத்து மேல் மண்ணுடன் 25 கிலோகிராம் கூட்டெரு மற்றும் 500 கிராம் ரீ.எஸ்.பீ கலந்து குழியை நிரப்பல். நடுகை - குழியை நிரப்பி இரண்டு கிழமைகளின் பின்னர் நெல்லிக்கன்றின் கொள்கலனினை அகற்றி நடுகை செய்தல்.

பசளையிடல்

ஒரு மரத்திற்கான வருடாந்த பசளையளவு (கிராமில்) யூரியா 450, ரீ.எஸ்.பீ 600, எம்.ஓ.பி 240 மேற்குறித்த அசேதன பசளைகளை 10 கிலோ கிராம் நன்கு உக்கிய மாட்டெருவுடன் கலந்து புரட்டாதி, ஐப்பசி மாதங்களிலிடல் சிறப்பானது.

கத்தரித்தல்

நடுகை செய்யப்பட்ட நெல்லிக்கன்றுகளை நிலமட்டத்தலிருந்து இரண்டரை அடி உயரம் வரை பக்க கிளைகளை வளரவிடாமல் நேராக வளர்த்தல். நிலமட்டத்திலிருந்து இரண்டரை அடி உயரத்தின் மேல் 4-5 கிளைகளை எல்லாத் திசைகளிலும் சுற்றிலுமாக வளரவிட்டு பராமரித்தல்

நீர்ப்பாசனம்

கோடை காலங்களில் 15 நாள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்தல் வேண்டும். நீரிழப்பை தடுப்பதற்கு காய்ந்த அலைகுழைகள், வைக்கோல் மற்றும் உக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி பாத்திகளுக்கு மூடு படையிடல். பத்திரக்கலவையானது தாவரத்தின் அடியிலிருந்து 15-20 செ.மீ தூரத்தில் இடப்படல் வேண்டும். சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ் இப்பயிர்ச்செய்கையை மேற்கொள்ளலாம்.

அறுவடையும் வருமானமும்

நடுகை செய்து 4-5 வருடங்களில் அறுவடை மேற்கொள்ளலாம். ஒரு கிலோகிராம் 15-20 எண்ணிக்கையான பழங்களை கொண்டது. ஒரு மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு ரூபா 10,000 வருமானம் பெற முடியும். இவ்வருமானத்தை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வர்க்கங்களை பயிரிட்டு பராமரிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

ஊடு பயிர்ச் செய்கை

பயிர் ஸ்தாபித்து 8 வருடங்கள் வரை உழுந்து, பயறு, கௌபி போன்ற குறைந்த நீர்த்தேவையுடைய மறுவயற் பயிர்களை பயிரிட முடியும். இதனால் ஒரு அலகு நிலத்தின் உற்பத்தி அதிகரிப்பதோடு வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரு ஏக்கரிற்கு 3-4 தேனீப்பெட்டிகளை வைப்பது சாலச்சிறந்தது. இதன் மூலம் நெல்லியின் மகரந்தச் சேர்க்கை அதிகளவில் நடைபெற்று உற்பத்தி அதிகரிப்பதுடன் தேன் மூலமாக மேலதிக வருமானத்தையும் ஈட்டிக்கொள்ள முடியும்.

மு.விளம்பிதன்
விவசாயப்போதனாசிரியர்
மாகாண விவசாயத்திணைக்களம் (வ.மா)


Add new comment

Or log in with...