உண்மை நிலையை மறைக்காது வெளிப்படுத்த சஜித் கோரிக்ைக | தினகரன்

உண்மை நிலையை மறைக்காது வெளிப்படுத்த சஜித் கோரிக்ைக

கொரோனா வைரஸ் தொடர்பில் உண்மை நிலையை மறைத்து நாட்டில் பாரிய விளைவுகளுக்கு இடமளிக்க வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான இந்த சூழலில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சர் தமது முழுமையான கவனத்தை செலுத்தி உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் சபையில் கேட்டுக்கொண்டார்.

ஆஸ்பத்திரிகளிலுள்ள நெருக்கடி நிலைமைகளை நிவர்த்தி செய்து போதியளவு மருந்துகள் மற்றும் இட வசதிகளை பெற்றுக்கொடுக்க உரிய கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் பரிசோதனைகளின் தர நிர்ணயம் தொடர்பில் அரசாங்க மருத்துவர்கள் சங்கம் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்ட அவர், தவறான தகவல்களை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டாம். அது பாரதூரமான பிரச்சினையை உருவாக்கும் என்றும்அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அனுரகுமார திசாநாயக்க எம்.பி. முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பில் முன்பதாகவே கடந்த ஜனவரி,பெப்ரவரி மாதத்தில் நான் வலியுறுத்தியிருந்தேன்.

எனினும் கடந்த பெப்ரவரி மாதத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, மக்கள் பயப்படத் தேவையில்லை கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக மாறவில்லை என்ற கருத்தை தெரிவித்து வந்தார்.

அப்போது எனது கருத்துக்களை எமக்கு சேறுபூசும் விதத்தில் பயன்படுத்தினர். சில சமூக வலைத்தளங்களும் அதற்கு உறுதுணையாக செயற்பட்டன.

சகல கருத்துக்களையும் அலட்சியப்படுத்தினர். திட்டமிட்ட செயற்பாடு அப்போது நடந்தது

இன்று நிலை என்னவாகி உள்ளது?

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கொத்தணிகள் உருவாகி வருகின்றன. எனினும் இப்போதும்அதன் தாய் கொத்தணி மினுவாங்கொடை என்றே கூறுகின்றனர்.

சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இடம்பெறும் இந்த சூழலிலும் இன்றும் உண்மை நிலையை வெளிப்படுத்த தவறுகின்றனர். நான் ஒரு போதும் எமது இராணுவத்தினரையோ பொலிசாரையோ சுகாதாரத்துறை அதிகாரிகளையோ குறை கூறவில்லை. அவர்களது சேவைக்காக நான் அவர்களை இந்த சமயத்தில் பாராட்டுகின்றேன். நாட்டின் பொருளாதாரம் முழு அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இப்போதாவது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதுதொடர்பில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சபையில் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...