கொரோனா கட்டுப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் | தினகரன்

கொரோனா கட்டுப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டங்கள்

அவசியம் தேவை என்கிறார் சுமந்திரன் எம்.பி

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம் .பி. எம்.ஏ. சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சுகாதாரத் துறை தொடர்பான சட்டங்கள் மிகவும் பழைமை வாய்ந்தவை என்பதை குறிப்பிட்ட அவர் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சபையில் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் முன் ஆயத்தம் எந்த விதத்திலும் போதாது என்பதையும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை ஆரம்பித்துள்ள நிலையில் எந்த விதத்திலும் அதனை நிராகரித்து செயற்பட முடியாது.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை மிக மோசமாக உள்ளது எனினும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை வைத்து தமக்கு அரசியல் ரீதியாக புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள பார்க்கின்றனர்.இந்த பேராபத்தின் விளைவுகளை புரியாமல் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

யார் முன்வைத்தாலும் சிறந்த யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். வைரஸ் பாதிப்பு தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சில யோசனைகளை தெரிவித்திருந்தோம்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...