20: மனசாட்சிக்கு உட்பட்டு வாக்களிக்க இம்தியாஸ் கோரிக்கை

20ஆவது திருத்தச் சட்டத்திற்கு மனசாட்சிக்கு உட்பட்டு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை அனைத்து எம்.பிக்களுக்கும் வழங்கினால் அரசாங்கத்தால் ஒருபோதும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இதனை நிறைவேற்ற முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

20ஆவது திருத்தச் சட்டத்திற்கு மனசாட்சிக்கு உட்பட்டு வாக்களிக்க அனைத்து எம்.பிக்களுக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்கத்திற்கு கிடைக்காது. 20ஆவது திருத்தச் சட்டத்தால் நாட்டுக்கோ மக்களுக்கோ ஒன்றும் நடைபெறப் போவதில்லை. பிரதமரின் அதிகாரமும் முழுமையாக நீக்கப்படும். பிரதமர் அதிகாரமற்றவராகுவார். அவரின் பிரபல்யத்தின் மூலம்தான் இந்த அரசாங்கம் அமைந்தது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

வெளிப்படையான வாக்களிப்பு காரணமாக எவரும் அரசாங்கத்தில் உள்ள எவரும் எதிர்த்து வாக்களிக்க மாட்டார். ஆனால், 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு கை உயர்த்தும் பலருக்கு எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படும்.

இந்த அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவந்த தொழிற்சங்கங்கள், மதத் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றனர். மக்கள் கருத்துகளுக்கும் வாய்ப்பளிக்காது அவசர அவசரமாக இதனை நிறைவேற்ற முற்படுகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 நெருக்கடிக்கு தீர்வுகாணம் வகையிலேயே இந்த பாராளுமன்றம் இச்சந்தர்ப்பத்தில் கூடியிருக்க வேண்டும்.

புதிய அரசியலமைப்பை உருவாக்க விசேட குழுவொன்றை அமைத்துள்ள பின்புலத்தில் 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருகின்றனர். 19இல் குறைப்பாடுகள் இருந்தால் அதற்கு முன்வைக்கும் திருத்தங்கள் ஜனநாயக ரீதியானதாக இருக்க வேண்டும். ஏகாதிபத்திய நோக்கியதாக திருத்தங்கள் இருக்க கூடாது.

நிறைவேற்று அதிகாரம், தேர்தல் முறை, மாகாண சபை முறைகள் மீள் மதிப்பீடு செய்யப்படும் என்றே தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தனர். ஆனால், தற்போது அனைத்து அதிகாரத்தையும் ஒருவரின் கீழ் கொண்டுவர முற்படுகின்றனர்.

ஷம்ஸ் பாயிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...