பேலியகொடை மீன் சந்தைக்கு பூட்டு; 49 பேருக்கு கொரோனா தொற்று

பேலியகொடை மீன் சந்தைக்கு பூட்டு; 49 பேருக்கு கொரோனா தொற்று-49 Tested Postive for COVID19-Peliyagoda Fish Market Closed

பேலியகொடை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஒன்றுகூடும் இடமான பேலியகொடை மீன்சந்தையில் கடந்த திங்கட்கிழமை (19) எழுந்தமானதாக 109 பேருக்கு PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முடிகள் இன்று (21) கிடைக்கப் பெற்றதற்கு அமைய, வர்த்தகர்கள் உள்ளிட்ட 49 பேருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பேலியகொடை நகரசபை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் பேலியகொடை நகர சபையின் புதிய செயலாளர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த சோதனை முடிவுகளுக்கமைய, மீன் சந்தைக்கு வருவோர் தொடர்பான உரிய விபரங்கள் அங்கு பதியப்படாமை காரணமாக, மேலும் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டுபிடிப்பது கடினமாக அமைந்துள்ளது. இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் வினவியபோது, இன்று (21) முதற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.

பேலியகொடை மீன் சந்தைக்கு நாளாந்தம் நாடு முழுவதிலுமிருந்து வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். இதில் வீட்டு உபயோகத்திற்காக மீன்களை எடுத்துச் செல்வோரை விட வர்த்தக நடவடிக்கைக்காக மீனை கொள்வனவு செய்யும் வர்த்தகர்கள் அதிகளவில் உள்ளதாக, தகவல்கள தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த தினத்தில் (19) பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் எழுந்தமானமாக பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தொற்று அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பில், அந்தந்த பிரதேசத்திலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறு பேலியகொடை மாநகர சபை செயலாளர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன், தாங்களாக முன்வந்து பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளை அறிந்துகொள்ளுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ராகமை நிருபர்)

இதேவேளை, நாடளாவிய ரீதியில் கடற்றொழில் சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சமூக பொறுப்போடு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...