உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கம்

யாழ். மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமை முடிவுறுத்தப்பட்டுள்ளது என அந்தக் கட்சியின் செயலாளரால் கடந்த 13ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் தெரிவத்தாட்சி அலுவலகருக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனுப்பிய கடிதத்தில், “அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கின்றது.

அதனடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிபாரிசின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் விஸ்வலிங்கம் மணிவண்ணன், எமது கட்சியின் நியமன உறுப்பினராக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு நியமிக்கப்பட்டார்.

எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுக்காற்று நடவடிக்கையால் விஸ்வலிங்கம் மணிவண்ணன், அந்தக் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

அதனால் அவரை யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்புறுப்புரிமையிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


Add new comment

Or log in with...