ரிஷாட்டின் கைதை தடுக்கும் மனு நவம்பர் 06 இல்

ரிஷாட்டின் கைதை தடுக்கும் மனு நவம்பர் 06 இல்-Rishad Bathiudeens Writ Petition Will be Taken On November 06

மனுதாரரின் முடிவை அன்றையதினம் அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த ரிட் மனுவை, எதிர்வரும் நவம்பர் 06ஆம் திகதி எடுத்துக் கொள்ள நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று (20) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க, சோபித ராஜகருணா ஆகியோரின் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.

தமது கட்சிக்காரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால், இது தொடர்பில் அவரிடம் ஆலோசனை பெறவேண்டியுள்ளதாக, மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 06ஆம் திகதி குறித்த மனுவை மீள அழைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றையதினம் மனு தொடர்பிலான, மனுதாரர் தரப்பு நிலைப்பாட்டை அறிவிக்குமாறு உத்தரவிட்டது.

கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலின்போது, அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி, இடம்பெயர்ந்த வாக்காளர்களை வாக்களிப்பதற்கு போக்குவரத்து வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

5 நாட்களாக தேடப்பட்டு வந்த அவர், நேற்றையதினம் திங்கட்கிழமை (19) அதிகாலை தெஹிவளையில் உள்ள எபினேசர் பிளேஸில் அமைந்துள்ள தொடர்மாடி வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அத்துடன் அவர் தலைமறைவாக இருப்பதற்கு உதவி புரிந்து அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் பெண் வைத்தியர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனைத் தொர்ந்து ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 8 பேரும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களுக்கு ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன், 222 ​​இ.போ.ச. பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான குறித்த அமைச்சின் கீழிருந்த ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியமை ஆகிய பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1981ஆம் ஆண்டு இலக்கம் 15 ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82 (1) பிரிவுக்கு அமைய, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், மீள்குடியேற்ற திட்ட முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...