ரிஷாட் பதியுதீன் 5 நாட்களின் பின் தெஹிவளையில் கைது

ரிஷாட் பதியுதீன் 5 நாட்களின் பின் தெஹிவளையில் கைது-Rishad Bathiudeen MP who had been evading the police for 5 days, was arrested by the CID this morning

நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது தொடர்பில் யோசனை

கடந்த 5 நாட்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (19) அதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 6 குழுக்களால் தேடப்பட்டு வந்த அவரை, அத்திணைக்களத்தின் வர்த்தக குற்ற விசாரணை இலக்கம் 02 பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குற்றப் புலனாய்வு திணைக்கள தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரிடம் விசாரணை மற்றும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு அதன் பின்னர், இன்றையதினம் (19) நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன், 222 ​​இ.போ.ச. பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான குறித்த அமைச்சின் கீழிருந்த ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியமை ஆகிய பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1981ஆம் ஆண்டு இலக்கம் 15 ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82 (1) பிரிவுக்கு அமைய, அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், மீள்குடியேற்ற திட்ட முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட மூன்று பேரையும் கைது செய்யுமாறு கடந்த புதன்கிழமை (14) சட்டமா அதிபர் உத்தரவிட்டார்.

இவர்களில் சந்தேகநபர்களில் ஒருவரான கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் கிருலப்பனை பகுதியில் வைத்து கடந்த புதன்கிழமை (14) கைது செய்யப்பட்டு, ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சட்டத்தை நிலைநாட்டத் தவறிய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனுக்கு பாதுகாப்பு வழங்கிய அவரது பொலிஸ்  கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து ரிஷாட் பதியுதீனின் சாரதிகள் இருவர் இரு வாகனங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.

அத்துடன், CIDயினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க ரிஷாட் பதியுதீன் மற்றும் சம்சுதீன் மொஹமட் யாசீனுக்கு நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.

அதன்படி, ஆறு பொலிஸ் குழுக்கள் ரிஷாட் பதியதீனை கொழும்பு மற்றும் மன்னாரில் உள்ள அவரது வீடுகள், கிழக்கு மாகாணத்திலும் தேடி வந்ததோடு, CIDயினர் அவரது மனைவியிடமும் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

பின்னர், ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற தொலைபேசெி உரையாடல் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கடந்த வெள்ளிக்கிழமை (16) CIDயினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், ரஊப் ஹக்கீமிடமிருந்தும் இது தொடர்பில் சிஐடியினர் வாக்குமூலமொன்றை பதிவு செய்திருந்தனர்.

இதேவேளை, தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதோடு, குறித்த மனு நாளையதினம் (20) எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


Add new comment

Or log in with...