கொழும்பு, ஆமர் வீதி பொலிஸ் சோதனைச்சாவடியின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் நிலையத்தின் 16 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆமர் வீதி பொலிஸ் நிலைய சோதனைச் சாவடியில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக அப்பொலிஸ் சோதனைச் சாவடியில் குறித்த பொலிஸ் சார்ஜென்ட் கடமையிலிருந்து காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று (18) ஓரிரு மணித்தியாலங்கள் குறித்த பொலிஸ் சோதனைச் சாவடியின் பணிகள் இடைநிறுத்தப்பட்டு முற்றுமுழுதாக கிருமிநீக்கம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று (18) மாலை 6.00 மணி முதல், வேறு பொலிஸ் நிலைய அதிகாரிகளைக் கொண்டு, மீண்டும் குறித்த பொலிஸ் சோதனைச் சாவடியின் பணிகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த பொலிஸ் அதிகாரிகள் 16 பேரினதும் PCR மாதிரிகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட எந்தவொரு படிநிலையில் உள்ள அதிகாரிகளும் சுகாதார பணிப்புரைக்கமைய, சுகாதார வழிகாட்டல்களை பேணுமாறு, அஜித் ரோகண வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Add new comment