விழிப்புடன் இருங்கள்; வீண் அச்சம் தவிருங்கள்! | தினகரன்

விழிப்புடன் இருங்கள்; வீண் அச்சம் தவிருங்கள்!

கொரோனா காலத்தில் பரீட்சை நடத்தப்படுவதால் மாணவர்கள் மத்தியில் பதற்றம் நீக்குவது அவசியம்; மாணவரை ஆற்றுப்படுத்துவது பெற்றோர் பொறுப்பு

கொரோனாவின் மூன்றாவது அலைக்கு மத்தியில் 2020 இற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்று வருகின்றது. இப்பரீட்சை தொடர்பில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சில முக்கிய விடயங்களை அறிந்திருக்க வேண்டிய அவசியமாகும்.

பெற்றோருக்கோ கொரோனா பற்றிய அச்சம். மாணவனுக்கோ கொரோனா மற்றும் பரீட்சை பற்றிய மனக்கிலேசம். எனவே இங்கு மாணவருக்கு உளரீதியான வலிமையை ஊட்ட வேண்டியது அவசியம். ஏனெனில் மாணவர்கள் முதிர்ந்த அனுபவமுள்ளவர்கள் அல்லர்.

கொரோனா அச்சமானது மாணவர்களது செயற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். எத்தகைய விவேகியாக, நுண்ணறிவு படைத்தவராக இருந்தாலும் கொரோனா பற்றிய அச்சம் பரீட்சையில் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். எனவே இன்று பெற்றோருக்குரிய தலையாய பொறுப்புகளில் ஒன்று தமது பிள்ளைக்கு கொரோனா பயத்தை நீக்கி பரீட்சையை மையமாகக் கொண்ட மனவலிமையை ஊட்டுவதாகும். அதற்காக கொரோனா பற்றி மாணவர் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை அல்லது அதன் தாக்கம் கொடூரமானது என்பது பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமல்ல என்பதல்ல இதன் கருத்து.

கொரோனா பற்றிய அதீத பயம் மாணவர்களிடத்தில் குடிகொள்ளக் கூடாது. அதற்கேற்ப பெற்றோர் நடந்து கொள்ள வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.கொரோனா பற்றிய அதீத பயம் ஒருவரைப் பற்றிக் கொண்டால் அது இருவிதமான பக்கவிளைவுகளைக்கொடுக்கலாம்.

அம்மாணவர் திறமையானவராக இருந்தாலும் உளரீதியில் பலவீனமாகி பாதிப்படைய வாய்ப்புண்டு. அதேவேளை திறமையில்லாத மாணவர் பலவானாக மாறவும் வாய்ப்புண்டு.

மனிதனின் பலம் தன்னம்பிக்கை. எனவே மாணவர்கள் தன்னம்பிக்கையுடன், மனஉறுதியுடன் பரீட்சை எழுத வேண்டும்.அதற்கு பெற்றோரும் மற்றோரும் உதவ வேண்டும்.

எனவே பெற்றோருக்கு இப்பரீட்சை முடியும் வரை பாரிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன. பெற்றோர் அநாவசியமாக வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா பற்றிய அதீதமான கருத்துகளை அல்லது முகநூலில் சில வேளைகளில் வரும் வதந்திகளை அவர்களிடம் பகிரக் கூடாது. அவர்களை சுயமாக படிக்க விடுதல் அவசியம். சுகாதார நடைமுறைகளை நாளாந்த கடமை போல மேற்கொண்டு பரீட்சைக்கு அனுப்புவதை இறுதிநாள் வரை தொடர வேண்டும்.

சமூகவலைத்தளங்களில் வரும் கொரோனா பற்றிய தகவல்களை அவர்களிடத்தில் பகிராதிருத்தல் நல்லது. பரீட்சையினதும் எதிர்காலத்தினதும் முக்கியத்துவம் பற்றிப் பேசுதல் பொருத்தமாகும்.

சிலவேளை கொரோனா தொற்று வந்தாலும் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ வைத்தியசாலையிலிருந்தோ பரீட்சை எழுத வாய்ப்புண்டு என்பதையும் மறந்து விடலாகாது.

அரசாங்கம் இத்தகைய சிக்கலான சூழ்நிலையிலும் துணிச்சலாக பரீட்சையை நடத்த முற்பட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும். 2020 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகி இன்றுடன் ஐந்து தினங்களாகின்றன. இப்பரீட்சை நாட்டின் சகல பாகங்களிலும் எவ்வித இடையுறுமின்றி நடைபெற்று வருகின்றது. சிலவேளை ஒரு மாணவருக்கு அல்லது ஒரு தொகுதி மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் கூட பரீட்சை நிறுத்தப்பட வாய்ப்பில்லை என்பதை மாணவரும் சரி பெற்றோரும் சரி உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே எது நடந்தாலும் பரீட்சை சீராக நடைபெறும் என்பது மட்டும் உண்மை.

கம்பஹா, திவுலப்பிட்டிய ஞானோதய வித்தியாலயத்தில் பரீட்சை எழுதிய மாணவனொருவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. உடனே அம்மாணவன் அருகிலுள்ள இரணவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பரீட்சை எழுத வாய்ப்பளிக்கப்பட்டது.

இன்னுமொரு துரதிர்ஷ்டவசமான சம்பவமொன்று முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காயில் இடம்பெற்றுள்ளது. துணுக்காயைச் சேர்ந்த மாணவியொருவர் இறைநம்பிக்கையின் அடிப்படையில் தனது அனுமதிஅட்டையை வீட்டின் சுவாமிஅறையில் உள்ள சுவாமி படம் வைக்கின்ற தட்டில் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டிருக்கிறார். அதன் போது அனுமதி அட்டை தவறுதலாக தீப்பிடித்து எரிந்திருக்கிறது.

இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை நிருவாகம் அறிந்து கொண்டதும் உடனடியாக மாற்று ஏற்பாட்டைச் செய்து மாணவியை பரீட்சைஎழுத ஏற்பாடுசெய்தது. இருப்பினும் அம்மாணவி பரீட்சை எழுதிக் கொண்டிருக்கையில் அனுமதி அட்டைஎரிந்த சம்பவம் பற்றி அதீதமாக, ஆழமாக கவலையுடன் சிந்தித்த காரணத்தினால் மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்.

எனவே பரீட்சைக் காலத்தில் படிப்பைத் தவிர வேறெந்த விடயங்களிலும் கூடுதலாக மனதை பறிகொடுக்கக் கூடாது என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணமாகும். அது கொரோனாவாக இருக்கலாம் எதுவாகவும் இருக்கலாம். அவ்வாறு மனதை வேறு சிந்தனையில் அலைய விட்டால் பாடங்களில் புள்ளிகள் குறைவதற்கு வாய்ப்புண்டு.

பரீட்சை வினாத்தாள்கள் அனைத்துமே கொரோனாவுக்கு முதலே அச்சடித்து பக்கட் செய்யப்பட்டு விட்டன. எனவே வினாத்தாள்களில் கொரோனா பரவ வாய்ப்பில்லை. மேற்பார்வையாளர்களும் சுகாதாரமுறைப்படி நடப்பதனால் மாணவர்களும் துணிந்து அச்சமின்றி பரீட்சை எழுதலாம்.

பரீட்சை எழுதும் மாணவர்கள் தினமும் புதிதுபுதிதாக முகக்கவசம் அணிவது நல்லது.

இன்றையசூழலில் சுகாதார விதிமுறைகளுக்கேற்ப மாணவர்கள் நடந்து கொண்டாலே போதுமானது. அடுத்தது மனஉறுதி, தன்னம்பிக்கையை தளர விடாமல், கொரோனா மீது மனத்தை செலுத்தாமல், எதிர்காலத்தை நினைத்து பரீட்சை எழுத வேண்டும்.எதிர்பார்க்கப்படும் வினாக்களுக்கான விடைகளை தயார்படுத்திக் கொண்டு போவது நலம். ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியை முடியுமானவரை சில அலகுகளை முதன்மைப்படுத்தி பயன்படுத்துவது சாலச்சிறந்தது.

பரீட்சைக்குச் செல்லும் வழியிலோ அல்லது முடிந்து வரும் வழியிலோ மாணவர் தமக்குள் வினா பற்றியோ ஏனைய விடயம் பற்றியோ கூட்டமாகவிருந்து விவாதிக்கக் கூடாது. பேனா, சாப்பாட்டுப் பொருள்களை தங்களுக்குள் பரிமாறக் கூடாது. முடியுமான வரை விரைவாக வீடு போய்ச் சேருவது நலம்.


Add new comment

Or log in with...