ஈஸ்டர் தாக்குதல் குறித்து முரண்பாடான வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற தினம் காலை 8.02 மணிக்கு அரச உளவுத் துறை முன்னாள் பிரிவு பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன சிங்கப்பூரிலிருந்த முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியுடன் தொலைபேசியில் உரையாடியதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவில் அம்பலமானது.

ஆனால் தாக்குதல் நடந்த பின்னரே தனக்கு தகவல் கிடைத்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஆணைக்குழுவில் மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்றது.

இதன் போது அவரின் பிரத்தியே பாதுகாப்பு அதிகாரிக்கு தொலைபேசியில் உரையாடியிருப்பது பற்றி வினவப்பட்டது. காலை 8.45 மணிக்கு முதலாவது தாக்குதல் நடந்த நிலையில் இது பற்றி அரச தரப்பு சட்டத்தரணி அவரிடம் கேள்வி எழுப்பியது.

தாக்குதலின் பின்னரே தனக்கு இது பற்றி தெரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

வன்னாத்திவில்லுவ சம்பவத்துடன் தொடர்புள்ள இரு சந்தேக நபர்களை விடுதலை செய்ய முன்னாள் ஜனாதிபதி கையொப்பமிட்டது குறித்தும் இதன் போது வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர்,ஒவ்வொரு நாளும் பெருமளவு கடிதங்களில் கையொப்பமிடுகிறேன்.இது தொடர்பான கடிதத்தை அதிகாரிகள் தான் தந்திருப்பார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் சாட்சியமளித்த அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க வாய்ப்பு இருந்தாலும் அதனை செய்ய முடியாமல் போனதற்கு பலரும் பொறுப்புக் கூற வேண்டும். இதனை தடுத்திருக்கலாம்.இதற்கு பலர் பொறுப்பு கூற வேண்டும்.அந்த பொறுப்பு பலரிடையே செல்ல வேண்டும்.

எமது நாட்டில் காணப்பட்டு பிரிவினை,மோதல் என்பவற்றை அடிப்படைவாத அமைப்புகள் பயன்படுத்திக் கொண்டன . ISIS போன்ற அமைப்புகள் எமது நாட்டிற்குள் நுழைந்தன என்றார்.

சஹ்ரான் குறித்து அஸாத் சாலி பல தடவை முறையிட்டிருந்தாரா? என அரச தரப்பு சட்டத்தரணி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ஆம் முறையிட்டார்.சிங்கள,தமிழ் மக்களை போன்றே முஸ்லிம் மக்களிடையேயும் பல்வேறு அமைப்புகள் கட்சிகள் உள்ளன.உள்ளக பிரச்சினைகள் காணப்பட்டன.சஹ்ரான் பற்றி பாதுகாப்பு சபையில் கவனம் செலுத்தப்பட்டது.

தாக்குதல் நடைபெற்ற 04 வாரங்களுக்கு முன்னர் சஹ்ரானின் முழு அமைப்பையும் அழித்தோம்.சகலரையும் கைது செய்தோம்.பயிற்சி முகாங்களை அடையாளம் கண்டோம். தாக்குதலின் பொறுப்பை ஏற்பதாக ISIS அறிவித்தது.

சஹ்ரானின் கொள்கையுடன் செயற்பட்ட மேலும் நபர்கள் இருந்தார்கள்.

70 வருடங்களாக தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களிடையே மோதல் இருந்தது.அரசியல் தலைமைத்துவங்கள் காரணமாக பிரிவு ஏற்படுகிறது என்றார்.(பா)


Add new comment

Or log in with...