தலைவன் தலைவி நலம் பாராட்டும் குறிஞ்சித் திணை

இலக்கண நூல்களிலிருந்து கோவை தோன்றியது என்பதற்கு மாறாக சங்க அக இலக்கியங்களிலிருந்தே கோவை இலக்கியம் தோன்றியது என்றும் நாம் கொள்ளலாம்.சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகையிலுள்ள அகநூல்களின் பாக்கள் ஏறத்தாழத் தொல்காப்பிய அகப்பொருள் இலக்கணத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. குறுந்தொகை நற்றிணை அகநானூறு போன்ற அக இலக்கியங்களில் ஐந்திணை நெறிப்படிப் பாக்கள் அமைகின்றன. இவை யாவும் ஒரே கவிஞர் பாடியவை அல்ல.

பல்வேறு புலவர்கள் பல்வேறு காலங்களில் பாடிய தனித்தனிப் பாடல்கள். பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையைக் கூறிய இலக்கியம் என்பதால் ஒவ்வொரு பாட்டின் கூற்றும் ஒவ்வொரு வகையாக அமைகிறது. ஒரு பாட்டு குறிஞ்சித் திணையில் தலைவன் தலைவியை நலம் பாராட்டுவதாக இருக்கலாம். அடுத்த பாட்டு மருதத் திணையில் தலைவனுக்குத் தோழி வாயில் மறுப்பதாக இருக்கலாம்.

மூன்றாவது பாட்டோ பாலைத் திணையில் தலைவன் தலைவியை நினைத்துப் புலம்புவதாக இருக்கலாம்.

இப்படிச் சங்க காலத்தில் ஒவ்வொரு பாட்டும் அந்தந்தக் கவிஞரின் மனநிலைக்கேற்ப, அவர் எடுத்துக் கொண்ட செய்திக்கேற்பப் பாடப்பட்டது.

பிற்காலத்தில் இந்தக் கூற்றுமுறைகளைத் தொகுத்து நாடகப்பாங்கில் வரிசைப்படுத்திக் காணும் போக்கு தோன்றியது. இதன் விளைவே கோவை இலக்கியம் என்று கூறலாம்.

அகப்பொருளுக்குரிய துறைகள் யாவும் நாடகப் பாங்கோடு முறையாகக் கோர்க்கப்பட்ட பொருண்மைச் சிறப்பால் கோவை என்னும் பெயரை இந்த இலக்கியவகை பெற்றுள்ளது என்று சொல்வார்கள்.

அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்ற அகப்பாடல் தொகுப்பு நூல்கள் 400 பாக்களைக் கொண்டு அமைந்துள்ளன. இதனை ஒட்டியே கோவை என்ற இலக்கிய வகையும் 400 பாக்களைக் கொண்டதாக அமையவேண்டும் என்னும் வழக்கு அமைந்தது.

இன்றுள்ள கோவை நூல்களில் திருக்கோவையார் ஒன்றுதான் சரியாக 400 பாக்களைக் கொண்டு அமைந்துள்ளது. பிற நூல்கள் ஏறத்தாழ இந்த எண்ணிக்கையை ஒட்டிச் செல்கின்றன. (ஸ)


Add new comment

Or log in with...