காட்டு யானைகளின் தொல்லையால் நிம்மதி இழந்துள்ள கிராமத்து மக்கள்

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் அச்சம் நிறைந்த வாழ்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் காட்டு யானைகளின் தொல்லை தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. யானைகள் நடமாட்டமுள்ள பிரதேச மக்கள் உயிராபத்தை எதிர்கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, அங்குள்ள மக்களைப் பாதுகாப்பதற்கான நிரந்தரத் திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் அவசர கவனம் செலுத்த வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. காடுகளை அண்மித்த எல்லைக் கிராம மக்கள், விவசாயக் கிராமங்களில் வசிக்கும் ஏழைகள், விவசாயம் செய்கை பண்ணப்படும் காணிகளுக்கு தினசரி போக்குவரத்துச் செய்யும் விவசாயிகள் என்றெல்லாம் பல்வேறு தரப்பினும் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு முகங்கொடுத்த வண்ணம் தங்களது தினசரி நாட்களைக் கழித்து வருகின்றனர்.

காட்டு யானைகளின் தாக்குதலில் மனித உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரின் உைடமைகளுக்கு சேதமேற்பட்டுள்ளது. அன்றாட வருமானத்தை இழந்து வாழ வழியின்றி நிர்க்கதிக்குள்ளானவர்களும் பலருள்ளனர். மாணவர்கள் சீரான கல்வி பெற முடியாது சிரமங்களை எதிர்கொள்கின்றனர். நெல் அறுவடையைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள அதிகமான பிரதேசங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் இரவு, பகல் வேளைகளில் அதிகரித்துள்ள யானைகளின் நடமாட்டத்தினால் நகர்வாழ் மக்களும் அச்சத்தை எதிர்கொண்டுள்ளனர். மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

காட்டு யானைகள் விவசாயிகள் மற்றும் குடியிருப்பாளர்களைத் தாக்குவதுடன் மாத்திரம் நின்று விடாது நெற்காணிகள், மேட்டுநிலப் பயிர்கள் என்பனவற்றை அழித்தும் வருகின்றன. தங்களது வீடுகள் உடைமைகளுக்கு அதிகம் சேதம் விளைவித்து வருவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

நெற்காணிப் பிரதேசங்களுக்குள் உட்புகும் யானைக் கூட்டங்களிடமிருந்து தங்களது விவசாய உற்பத்திகளைப் பாதுகாப்பதில் அம்பாறை மாவட்ட எல்லைக் கிராம விவசாயிகள் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கான நிரந்தர பாதுகாப்புத் திட்டங்களை அவர்கள் எதிர்பார்த்தவர்களாக உள்ளனர்.

இம்முறை சிறுபோக நெற்செய்கையாளர்கள் காட்டு யானைகளிடமிருந்து தங்களது நெற்காணிகளைப் பாதுகாத்துக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.விளைந்து அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த நெற்பயிர்களை காட்டு யானைகள் தின்று அழித்து துவம்சம் செய்து நஷ்டமேற்படுத்தின.

நெற்காணிகளைப் பாதுகாக்கும் பணியில் பிரதேச ரீதியாக பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், இதர பொருட்களை விவசாயிகள் தங்களது சொந்தச் செலவில் வழங்கி வருவதுடன், பணியாட்களுக்கான கூலியாக அறுவடையின் போது நெல் வழங்கப்பட்டும் வருகின்றது. யானை பாதுகாப்புப் பணிக்காக விவசாயிகள் இவ்வாறு ஒவ்வொரு போகமும் மேலதிக செலவை எதிர்கொண்டு வருகின்றனர்.

இரவு, பகல் வேளைகளில் தொல்லை கொடுத்து வரும் காட்டு யானைகளிடமிருந்து தங்களையும், தங்களது தொழில் முயற்சிகளையும் பாதுகாக்குமாறு பொதுமக்களும், விவசாயிகளும் முன்வைத்துவரும் தொடர் கோரிக்கைகள் இதுவரை பலனளிக்கவில்லை எனவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது. தற்போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க இதற்கான இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத் திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல், வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திகாமடுல்ல மாவட்டத்தைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க மூவின மக்களின் பேராதரவு, அபிமானத்தைப் பெற்றவர். கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் அதிகமான மக்கள் வாக்களித்து தங்களது ஆதரவை அவருக்கு வெளிப்படுத்தியிருந்தனர். விமலவீர திஸாநாயக்கவுடன் இம்மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மூவின மக்கள் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர். தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் பலர் இராஜாங்க அமைச்சருடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.

காட்டு யானை நடமாட்டமுள்ள பிரதேசங்களில் மின்சார பாதுகாப்பு வேலிகளை அமைத்து, அவஸ்தையுறும் மக்களுக்கு பாதுகாப்பளிக்க இராஜாங்க அமைச்சர் நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)


Add new comment

Or log in with...