விவசாயிகளை வஞ்சிக்க அனுமதிக்க மாட்டோம் | தினகரன்

விவசாயிகளை வஞ்சிக்க அனுமதிக்க மாட்டோம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை பாஜக அரசு திரும்ப பெறவேண்டும் என காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.

விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும், விவசாயிகளின் நலன் காக்கும் வரை ஓய மாட்டோம், விவசாயிகளை வஞ்சிக்க அனுமதிக்க மாட்டோம், பாஜக அரசின் வேளாண் சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பது போன்ற முழக்கங்களை மு.க.ஸ்டாலின் எழுப்ப, அவரைத் தொடர்ந்து தொண்டர்கள் முழக்கமிட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மத்திய அரசு புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கி கொண்டு இருப்பதாகவும், விவசாயி என சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார். விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்துக்கு அதிமுக துணை போய் உள்ளது. இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுமார் 3700 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார். சென்னை வடக்கில் நடந்த போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி, சென்னை தெற்கில் நடைபெற்ற போராட்டத்தில் வைகோ, கடலூரில் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.


Add new comment

Or log in with...