கொரோனா வைரசால் இதயத்துக்கு பாதிப்பு: ஹர்ஷ்வர்தன்

''கொரோனா வைரஸ், நுரையீரல் உள்ளிட்ட சுவாசப் பிரச்சினையை மட்டும் ஏற்படுத்தவில்லை. அதனால், மாரடைப்பு உள்ளிட்ட இதயப் பிரச்சினைகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ''இது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

'சண்டே சம்வாத்' என்ற பெயரில், ஞாயிற்றுக்கிழமைகளில், பொதுமக்களின் கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹர்ஷ் வர்தன், சமூக வலை தளத்தில் பதில் அளித்து வருகிறார்.

பல்வேறு கேள்விகளுக்கு அவர் நேற்று அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ், நுரையீரல் உள்ளிட்ட சுவாசப் பிரச்னைகளை உருவாக்குவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதுபோல், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட மற்ற உறுப்புகளையும் பாதிப்பதாக, சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது, மத்திய அரசின் கவனத்துக்கும் வந்துள்ளது. இது, மிகவும் சிறிய அளவில் நடந்துள்ள ஆய்வு.

இதுபோன்ற சிறிய அளவிலான ஆய்வுகளில் இருந்து சரியான முடிவுகளை தெரிந்து கொள்ள முடியாது. இருந்தாலும், இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்கிறோம். இது தொடர்பாக ஆய்வு செய்யும்படி, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உள்ளிட்டவற்றை அறிவுறுத்தி உள்ளோம். ஐ.சி.எம்.ஆர்., நடத்தியுள்ள ஆய்வில் இருந்து, 'ஹேர்டு இம்யூனிட்டி' எனப்படும், சமூக கூட்டு எதிர்ப்பு திறனை நாம் இன்னும் எட்டவில்லை. ஹேர்ட் இம்யூனிட்டி என்பது, ஏற்கனவே உள்ள நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு திறன், நாட்டில் அதிக அளவில் இருந்தால், புதிய நோய்களை எதிர்க்கும் சக்தியை பெறுவோம்.

தற்போது அந்த நிலையை நாம் எட்டவில்லை. எனவே, நோய் பரவலை வேகமாக தடுக்க முடியாது. எனினும் நாம் கவலை கொள்ளத் தேவைஇல்லை. இருப்பினும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.வழிபாட்டு தலங்கள் உட்பட, அதிக மக்கள் கூடும் இடங்களில் இருக்கும்போது, முக கவசம் அணிவதை அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


Add new comment

Or log in with...