சமூக மாற்றத்தின் முகவராக தொழிற்படவேண்டிய மஸ்ஜித்கள் | தினகரன்

சமூக மாற்றத்தின் முகவராக தொழிற்படவேண்டிய மஸ்ஜித்கள்

“ஸஜத” எனும் வினை அடியிலிருந்து மஸ்ஜித் எனும் சொல் உருவாகின்றது. ஸுஜூத் செய்யும் இடமாகிய பள்ளிவாயில் எனும் சிந்தனை இங்கிருந்தே உருவாகின்றது. பள்ளிவாயில் என்பது இதர மதங்களின் வணக்கஸ்தலங்கள் போன்றதல்ல. அது ஒரு சிந்தனை. நாகரிகத்தின் தொட்டில். கலாசார கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். ஆளுமை உருவாக்கத்தின் பயிற்சிப்பாசறை. அது ஒரு கோட்பாட்டை அமுலாக்குவதற்கான பயிற்சியை முழுமையாக வழங்கும் இடம். பள்ளிவாயில்களின் சிந்தனையை அல்குர்ஆன் நோக்கும் பார்வையில் பார்ப்பது காலத்தின் தேவையாகும்.

சமூக மாற்றத்தின் முகவராக தொழிற்படும் பள்ளிவாயில் குறித்து அல்குர்ஆன் மிக அழகாக பேசியுள்ளது. அதன் நிர்வாகப்பணியின் காத்திரமான பங்களிப்புக்கள் குறித்து பேசுகிறது. இறைவனின் விருப்புக்குரிய இடமாகிய, அருளும் அமைதியும் சதாவும் இறங்கும் இடமாகிய, வணங்கி வழிபடத்தகுதியும் தகைமையும் அருகதையும் முழுமையாக பெற்ற அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்பதை தினமும் நிறுவும் இடமாக பள்ளியை பார்க்க முடியும்.

எனவே இத்தகைய சங்கையும் புனிதத்துவமும் நிரம்பி வழியும் அருள்மிகு இடத்தையும் அதன் காத்திரமான செயற்பாடுகளையும் நிர்வகிக்கும் மனிதர்கள் பெற்றிருக்க வேண்டிய தகைமைகளை அல்லாஹ்வே குறிப்பிடுகின்றான். இஸ்லாமிய வரலாற்றின் நடைமுறை வடிவம் மதீனாவில் ஆரம்பிக்கும் முறைமையை நோக்கும் போது அது தெளிவாக மஸ்ஜிதை மையமாக வைத்தே கருக்கொள்கிறது என்பது புரியும். மஸ்ஜித் என்பது முஸ்லிமின் வாழ்வில் பிரிக்க முடியாத அம்சம். ஒரு முஸ்லிமை அடையாளப்படுத்தும் அளவீடாக தொழுகை உள்ளது. தொழுகையை நிறைவேற்றும் இடமாக மஸ்ஜித் உள்ளது. தொழுகையை முறையாக முழுமையாக நிலையாக பேணாதவனுக்கு இஸ்லாத்தில் சமூகத்தில் அந்தஸ்தோ அங்கீகாரமோ இருக்க முடியாது.

இலங்கையில் இஸ்லாம் அறிமுகமான வரலாற்றை நோக்கும்போதுகூட இலங்கையின் கரையோரப்பகுதிகளுக்கு வியாபாரிகளாக கடல்வழி மூலமாக வந்திறங்கிய எம் மூதாதையர்கள் ஆரம்பமாக பள்ளிவாயில்களை அமைத்து தமது தொழுகை எனும் பிரதான கடமையை நிறைவேற்றினர். கடல் கடந்து வாணிபம் செய்ய வந்தாலும் பள்ளிவாயில்களுடனான தொடர்பு அவர்களது வாழ்வின் அத்திவாரமாக இருந்து உயிரோட்டத்தை வழங்கின.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் தொழுகை என்பது வெறும் சடங்காக, கடமையாக, மாத்திரம் இருக்காமல் அது சமூகவியல் பரிமாணம் ஒன்றைப்பெற்று சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதை நோக்காக கொண்டிருப்பது போலவே பள்ளிவாயில்கள் அதைவிடப் பாரிய மாற்றத்தை தோற்றுவிக்கும் இடமாகவும் அதனை வழிப்படுத்தி நெறிப்படுத்தும் களமாகவும் தளமாகவும் இருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது.

இஸ்லாமிய வரலாறு நெடுகவும் பள்ளிவாயில்கள் மிகப்பெரும் சாதனைகளை நிலைநாட்டியுள்ளன. இஸ்லாம் எதிர்பார்க்கும் ஒட்டுமொத்த மாற்றத்தையும் வழிநடாத்தும் கேந்திர தளமாகவே தொழிற்பட்டுள்ளன. சமூகத்தின் பூரண அங்கீகாரம் அதற்கு காணப்பட்டது. ஆனால் கால ஓட்டத்தில் மஸ்ஜித் என்பது தொழுகைக்கு மாத்திரம் உரிய இடமாக சுருக்கப்பட்டது. யார் வேண்டுமானாலும் தனது அதிகாரம் பணம் செல்வாக்கு போன்றவற்றை உபயோகித்து பள்ளியை நிர்வகிக்கும் நிலை வந்தது. எனவே சமூகம் வேண்டி நிற்கும் அடிப்படைதேவைகள் மாற்றங்கள் குறித்து சிந்திக்கும் பாங்கும் பாரம்பரியமும் தூக்கி எறியப்பட்டது. சமூகத்துக்கும் பள்ளிக்கும் இடையில் பேணப்பட்ட கட்டிறுக்கமான உறவு அறுபட்டது. சமூகத்தின் அடிப்படைப்பிரச்சினைகள் குறித்து அலசும் தேவைகளை பள்ளிகள் நிறைவேற்றும் நிலையம் மரபும் அறவே இல்லாமல் போனது. இந்த நிலையை தலைகீழாக மாற்றி இஸ்லாம் கூறும் வழிமுறைக்கமைய சமூகத்தை நிர்வகித்து வழிநடாத்தும் பொறுப்பை பள்ளிகளுக்கு கொண்டுவர வேண்டிய காலத்தின் தேவையை உணர வேண்டியுள்ளது.

பள்ளியின் ஆத்மீக சூழலும் அமைதியும் மாத்திரமே மனித வாழ்வின் சுபீட்சத்துக்கு பங்காற்ற முடியும். ஊரின் செழுமையானது பள்ளியின் தன்மையை பள்ளிக்கும் மக்களுக்கும் உள்ள உறைவைப்பொறுத்தே கட்டியெழுப்பப்படும். இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித்கள் ஆற்றிய பங்களிப்புகள் ஈடு இணையற்றவை. அல்லாஹ்வின் கட்டளைகளை புவிப்பந்தில் நிலை நாட்டுவதற்கான போதனைகள் வழங்கப்பட்ட இடம் அது.மனித உள்ளங்களை கவர்ந்திழுத்து ஈமானிய பாடங்களை போதனைகளாக புகட்டிய பாசறைகள் அவை.ஆன்மீக ஞானிகளும் அறப்போராளிகளும் ஆளுமை மிக்கோரும் அறிஞர்களும் அல்லாஹ்வைப்பயந்தவர்களும் உருவாக்கப்பட்ட இடம் அது. இஸ்லாம் அதன் மொத்த வடிவத்தையும் அமுலாக்கிய இடம். மஸ்ஜிதின் புனிதத்தன்மை குறித்தும் மகத்துவம் குறித்தும் அல்குர்ஆன் ஹதீஸ் வசனங்கள் விரிவாக பேசுகின்றன. இஸ்லாமிய வரலாற்றின் தோற்றுவாயாக முன்மாதிரியாக அமைந்த மஸ்ஜித் எனும் சிறப்பு மஸ்ஜித் அந்நபவியை சாரும்.அது மத விவகாரங்கள் வழிபாடுகள் நிறைவேற்றப்படும் இடமாக மாத்திரம் காணப்படவில்லை.

கருதப்படவில்லை. இஸ்லாமிய போதனைகள் மொத்தமாக அறிவூட்டப்படும் இடமாகவும் அமுலாக்கப்படும் இடமாகவும் காணப்பட்டது. அது இஸ்லாமிய பணிமனையாகவே தொழிற்பட்டது. இராணுவ பயிற்சிகள் நடைபெறும் களமாக இருந்தது. ஆய்வு மன்றமாக பரிணமித்தது. காழி நீதிமன்றமாக தொழிற்பட்டது. அரசியல் வாசஸ்தலமாக விளங்கியது. திண்ணைத் தோழர்களின் வதிவிடமாக மாறியது. மொத்தத்தில் சமூக உறவை வலுவூட்டும் கலாசார மத்திய நிலையமாக விளங்கியது. அறிவுப்பணிகள், ஆய்வுப்பணிகள், ஆன்மீகப்பணிகள், அறப்பணிகள், ஆளுமை உருவாக்கப்பணிகள் எல்லாமே அரங்கேறிய இடம் அதுதான். சமூகத்தின் பொருளாதார விவகாரங்கள் பேசப்படும் இடமாக நடைமுறைப்படுத்தப்படும் இடமாக விளங்கியது. இஸ்லாமிய நாகரிகம் வேர்விட்டு வளர்ந்த இடம் பள்ளிவாயில் தான். சமூகத்தின் அறிவுப்பாரம்பரியத்தின் அடித்தளமாக இயங்கும் பாடசாலையாகவும் பரிணமித்தது. இஸ்லாமிய அறிவுப்பாரம்பரியத்தின் மூலமாக கருதப்படும் எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் கி.பி.970  இல் கட்டப்பட்ட பள்ளிவாயிலின் பரிணாம வளர்ச்சிதான் என்பது நினைவு கூரத்தக்கது. ஆனால் இன்றைய காலப்பகுதியில் மஸ்ஜித் தனது இடத்தையும் செல்வாக்கையும் இழந்து தனது பழம்பெரும் வரலாற்றுப்பாத்திரத்தையும் தணித்துள்ளது.

மஸ்ஜித்கள் மிகவும் கம்பீரமாக காட்டப்படும் அளவு அதன் வரலாற்றுப்பங்களிப்புக்களின் கால்வாசியாவது நிறைவேற்றப்படுவதில்லை. பள்ளிவாயில்களில் அல்குர்ஆன் மத்ரஸா ஹிப்ல் தவிர்ந்த வேறு விசேடமாக எதுவும் திட்டமிட்டு செய்யப்படுவது மிக மிக அபூர்வம். எனவே இஸ்லாமிய நோக்கில் பள்ளிவாயில்கள் குறித்தும் அதன் பால் உள்ள சமூக்கடமைகள் குறித்தும் பொதுமக்கள் உணர வேண்டும். இந்த விடயத்தில் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும்.

மிகவும் தகுதியும் தகைமையும் வாய்ந்த அல்லாஹ்வை அஞ்சும் அறிவுள்ளவர்கள் அதன் நிர்வாகத்துக்கு வரவேண்டும். பள்ளிவாயில்கள் வரலாறு நெடுகவும் ஆற்றிய மகத்தான பணிகள் நினைவுகூரப்பட வேண்டும். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.!

அபூ ஷாதிபி


Add new comment

Or log in with...