உணரப்பட்ட நில அதிர்வு நிலத்தட்டுகளின் அதிர்வால் உண்டாகவில்லை

உணரப்பட்ட நில அதிர்வு நிலத்தட்டுகளின் அதிர்வால் உண்டாகவில்லை-Earth Tremor Reported-Haragama Kandy

விக்டோரியா தேக்கத்திற்கு அருகில் பாரிய பாறைகள் வீழ்ந்நதிருக்கலாம்

கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி இரவு 8.32 மற்றும் இன்றையதினம் (02) கண்டி பிரதேசத்தில் உணரப்பட்ட நில அதிர்வானது, பூமியின் அடியிலுள்ள நிலத்தட்டுகளின் அதிர்வினால் அல்லது இயற்கையான நில நடுக்கம் இல்லை என, புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் அறிவித்துள்ளது.

குறித்த நில அதிர்வு பல்லேகலை மற்றும் மஹகனதராவ நில நடுக்க அவதான நிலையங்களில் சிறிய அளவில் பாதிவாகியுள்ளதாகவும், பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 29 ஆம் திகதி ஏற்பட்ட நில அதிர்வு குருதெனிய, பாரகம, அநுரகம, மைலபிட்டி பகுதி பிரதேசவாசிகளால் உணரப்பட்டதோடு, இன்று (02) ஏற்பட்ட சிறியளவிலான அதிர்வு அம்பகோட்டை மற்றும் அலுத்வத்த ஆகிய பிரதேசங்களில் ஓரளவு உணரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கள ஆய்வுக்காக புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தைச் சேர்ந்த 06 புவிச்சரிதவியலாளர்கள் மற்றும் நில அதிர்வு நிபுணர்களைக் கொண்ட இரண்டு குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு நிலைமைகள் அவை புவியின் நிலத்தட்டுகள் மூலம் உருவானவை அல்ல என்பதை உறுதிப்படுத்துவதாகவும், விடோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகே பலவீனமான பாறைகள் அல்லது பாரிய சுண்ணாம்புக் கற்பாறைகள் வீழ்ந்ததன் மூலம் குறித்த அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் எனும் கோணத்தில் நோக்கப்படுவதாகவும், புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...