பொலிஸாரை டிப்பரால் மோதிய சம்பவம்; மேலுமொரு சார்ஜெண்ட் பலி

விபத்தொன்றில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் இன்று (20) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜூலை 13ஆம் திகதி இரவு 11.00 மணியளவில், ஹக்மன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை – ஹக்மன வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் சார்ஜென்டே இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜூலை 13ஆம் திகதி இரவு 11.00 மணியளவில், ஹக்மன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை – ஹக்மன வீதியில் கொங்கல 13ஆவது மைல்கல்லில் வீதி தடை கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது டிப்பர் வாகனத்தினால் மோதித் தள்ளிய சம்பவத்தில், ஹக்மன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவரும் வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவருமான 36 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

அத்தோடு, இச்சம்பவத்தில் பொலிஸ் சார்ஜெண்ட் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.

இதில் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் சார்ஜெண்ட் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹக்மன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவரும், கிரிந்த பிரதேசத்தைச் சேர்ந்தவருமான 47 வயதுடைய பொலிஸ் சார்ஜென்டே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (20) இடம்பெறவுள்ளது.


Add new comment

Or log in with...