சகல விளையாட்டையும் அபிவிருத்தி செய்வேன்

 – நாமல் ராஜபக்ஷ

இலங்கையின் கிரிக்கெட் அமைச்சராக தான் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்த புதிய விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்ஷ, நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுக்களினதும் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் முதலாவது இளம் வயது விளையாட்டுத்துறை அமைச்சராக, தேசிய ரக்பி அணிக்காக விளையாடிய 34 வயதுடைய நாமல் ராஜபக்ஷ (12) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,

பாராளுமன்ற உறுப்பினராக கடந்த காலங்களில் நான் செயற்பட்டுள்ளேன். அதிலும் குறிப்பாக, முதல்தடவையாக எனக்கு அமைச்சுப் பதவி கிடைத்துள்ளதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

அத்துடன். ஒரு விளையாட்டு வீரராக என்னை இந்த நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமித்ததற்கு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாட்டில் உள்ள பெரும்பாலானோர் கிரிக்கெட் விளையாட்டை பற்றி தான் அதிகம் பேசுகின்றார்கள். ஆனால், நான் கிரிக்கெட் அமைச்சர் அல்ல என்பதை முதலில் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்.

எனவே என்னை இந்த நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராகவே ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுக்களின் பிரதிநிதியாகக் தான் நான் செயற்படவுள்ளேன். இதில் கிரிக்கெட் விளையாட்டுக்கு என்று தனியாக ஒரு நிர்வாகம் உள்ளது.

எதிர்காலத்தில் சிரேஷ்ட மற்றும் முன்னாள் வீரர்கள் அனைவரோடும் பேச்சுவார்த்தை நடத்தி கிரிக்கெட் விளையாட்டை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன்.

இலங்கையில் உள்ள ஏனைய விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பின்தங்கிய கிராமங்களில் உள்ள வீரர்களை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.


Add new comment

Or log in with...