நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் இன்று ஆரம்பம்

சுற்றறிக்கையை பின்பற்ற கல்வியமைச்சு அறிவுறுத்தல்

நாட்டிலுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சகல பாடசாலைகளும் இன்று சுமார் ஆறுமாத கால நீண்டவிடுமுறையின் பின்னர் ஒரே தடவையில் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.

அதற்கான நடைமுறை ஒழுங்கு விதிகளை கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.

அதன்படி 200 பிள்ளைகளை விட குறைந்த எண்ணிக்கையுடைய பிள்ளைகள் பயிலும் சகல பாடசாலைகளும் இன்று(10) முதல் திறக்கப்படும்.அந்தப் பாடசாலைகளில் உள்ள சகல வகுப்புகளும் ஆரம்பமாகும். அதேவேளை 200 பிள்ளைகளைவிட கூடிய பிள்ளைகளைக் கொண்ட பாடசாலைகளில் 5,10,11,12,13 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எல்லா நாட்களும் பாடசாலை நடைபெறும். ஏனைய வகுப்புகளுக்கு நாள் ரீதியில் வகுப்புகள் நடைபெறும். அதாவது நாளொன்றுக்கு 7 விதமாக வகுப்புகள் நடைபெறும்.  அந்த வகுப்பு மாணவர்கள் மாத்திரமே சமுகமளிக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று தரம் 1 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும்.அதேபோன்று செவ்வாய்க்கிழமை தரம் 2 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும்.

புதன்கிழமை தரம் 3 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கும்,வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரம் 4 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும். மேற்கூறபட்டவாறு பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பமாகும். அதாவது வாரத்தில் ஒரு நாள் அல்லது இரு நாள் மாத்திரம் பாடசாலைக்கு மாணவர்கள் சமுகமளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பேணும் வகையில் மிகவும் கவனமாக இக்கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா முற்றாக நாட்டைவிட்டு நீங்கியதும் காலப் போக்கில் வழமையான நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

நேரத்தைப் பொறுத்தவரை தரம் 10,11,12,13 வகுப்புகளுக்கு காலை 7.30 முதல் மாலை 3.30 வரையும் ஏனைய வகுப்புகளுக்கு வழமையான நேரப்படியும் நடைபெறும்.

பி.ப. 1.30 மணிக்கு முடிவடையும் வகுப்புகளுக்கு ஒரு இடைவேளை வழமைபோன்று இடம்பெறும். ஆனால் பி.ப. 3.30மணிக்கு முடிவடையும் வகுப்பு மாணவர்க்கு இரண்டு இடைவேளைகள் அதுவும் 20 நிமிடத்திற்கு மேற்படாதவண்ணம் வழங்கப்படுதல் வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அனைத்து ஆசிரியர்களும் கடமைக்கு சமுகமளிக்க வேண்டும். கற்பித்தலுக்கு மேலதிகமாக மேற்பார்வை மதிப்பீடுகளை பரீட்சித்தல் சுகாதார மற்றும் ஒழுங்கு பேணல் கருமங்களிலும் பொறுப்புக்களை கையேற்க வேண்டும்.

பி.ப. 3.30 மணிவரை நேரசூசி உள்ள ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து ஆசிரியர்களுக்குமான கடமை நேரம் மு.ப. 7.30 மணி தொடக்கம் பி.ப.1.30மணிவரையுமாகும். கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் வழமைபோன்று கடமைக்காக சமுகமளிக்க வேண்டும்.பாடசாலை மட்டக்கணிப்பீடுகள் மற்றும் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான முடிக்கப்படாத பரீட்சைகளைத் தவிர தவணைப் பரீட்சைகளையோ வேறு பரீட்சைகளையோ நடாத்தக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை விளையாட்டுப் போட்டி, தமிழ் மொழித்தினப் போட்டி, ஆங்கில தினப்போட்டி என பல புறக்கிருத்திய செயற்பாடுகள் பூரணமாகவே பாதிக்கப்பட்டுள்ளன.

 

காரைதீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...