அரசியல் அனுபவ முதிர்ச்சி கொண்ட தலைவரிடம் மீண்டும் தலைமைத்துவம்

பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றியீட்டியதையடுத்து, மீண்டும் பிரதமராக நேற்று பதவியேற்றுள்ளார் மஹிந்த ராஜபக்‌ஷ. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தெரிவான புதிய அரசாங்கத்தை சீராக வழிநடத்திச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பை மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.

தெற்காசியாவின் அரசியல் தலைவர்களில் ஆழ்ந்த அனுபவமும், ஆற்றலும் கொண்ட அவருக்கு நாட்டு மக்களில் பெரும்பாலானோர் மீண்டும் அரசியல் தலைமைத்துவ அதிகாரப் பொறுப்பை வழங்கியிருக்கின்றனர். அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் பண்பைக் கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய பொறுப்பை செவ்வனே முன்னெடுத்துச் செல்வாரென்பதில் மக்கள் முழுமையான நம்பிக்ைக வைத்துள்ளனர்.

மைத்திரி_ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் 2019 நவம்பரில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட பொதுத் தேர்தல் இதுவென்பதால் இத்தேர்தல் உன்னிப்பாக நோக்கப்பட்டது. இத்தேர்தலில் அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுமென்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

எதிரணியினர் அரசுக்கு எதிராக பலவிதமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்துள்ள போதிலும், மக்கள் மத்தியில் பொதுஜன பெரமுன கொண்டுள்ள செல்வாக்கில் சிறியதொரு பாதிப்பும் ஏற்படவில்லை. தேர்தல் பிரசார காலத்தில் அரசாங்கத்தின் மீது எதிரணியினர் ஆதாரங்கள் எதுவுமன்றி பாரதூரமான குற்றச்சாட்டுகளையெல்லாம் சுமத்தி வந்தனர். அவற்றையெல்லாம் மக்கள் பொருட்படுத்தவேயில்லை. மக்கள் தமது தீர்ப்பை தீர்க்கமாக அளித்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் கொள்கைத் திட்டங்களை மக்கள் முழுமையாக அங்கீகரிக்கின்றனர் என்பதே இந்தத் தீர்ப்பின் அர்த்தமாகும். பெரும்பான்மையின மக்கள் மாத்திரமன்றி வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற சிறுபான்மையின மக்களில் கணிசமானோரும் பொதுஜன பெரமுனவுக்கு மாத்திரமன்றி அதற்கு ஆதரவான தோழமைக் கட்சிகளுக்கும் இத்தேர்தலில் வாக்களித்திருக்கின்றனர். அரசாங்கத்துக்கு நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும், பல்லின மக்களும் ஆதரவளித்துள்ளனரென்பதே இத்தேர்தல் முடிவின் அர்த்தமாகும்.

இவ்வாறான நிலையில், பொதுஜன பெரமுன பெரும்பான்மையின மக்களுக்கு மாத்திரமே உரித்தான கட்சியென இனிமேல் எண்ணி விட முடியாது. இக்கட்சியானது நாட்டிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானதென்பதே உண்மையாகும். அதேசமயம் வடக்கு, கிழக்ைகச் சேர்ந்த மக்கள் தேசிய அரசியலில் பங்கேற்க வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனரென்பதும் இப்போது புலனாகின்றது. இது ஆரோக்கியமானதொரு சமிக்ைஞ ஆகும்.

இதுஇவ்விதமிருக்க, சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளை எடுத்துக் கொள்வோமானால் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுதான் இங்கே பாரதூரமானதாக நோக்கப்படுகின்றது.

மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்க் கட்சிகளுக்கு இத்தேர்தலில் குறிப்பிடத்தக்க பின்னடைவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அவை தமக்குரிய பாராளுமன்ற ஆசனங்களை பொதுத் தேர்தலில் தக்க வைத்துக் கொண்டுள்ளன. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்று சிறுபான்மையின கட்சிகளும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. அவை ஏற்கனவே வைத்திருந்த பாராளுமன்ற ஆசனங்களை இம்முறை தேர்தலில் இழந்துள்ளன.

அக்கட்சிகள் செல்வாக்ைக இழந்துள்ளதற்கான காரணங்கள் மக்களுக்குத் தெரியாததல்ல. அக்கட்சிகள் தம்மை சுயபரிசோதனை செய்து தமது தவறுகளை திருத்திக் கொண்டாலேயே எதிர்காலத்தில் அரசியல் பயணத்தைத் தொடர முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரை அக்கட்சியானது தம்மை ஆதரித்த மக்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ளவில்லை என்பதே பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு தீர்க்கப்படாத அரசியல் சார்ந்த பிரச்சினைகள் உள்ளனவென்பது மறுக்க முடியாததாகும். அப்பிரச்சினைக்கு பெரும்பான்மையினத்தின் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்பதே யதார்த்தம் ஆகும். அவ்வாறிருக்ைகயில், தமிழ் மக்கள் மத்தியில் நடைமுறைச் சாத்தியமற்ற தீர்வுகளை முன்வைத்து மக்களை கற்பனையுலகில் சஞ்சரிக்க வைப்பது தமிழ்க் கட்சிகள் எதற்குமே பொருத்தமானதல்ல. மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றுள்ள அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டின் மூலம் தீர்வு காண்பதற்கே தமிழ்க் கட்சிகள் முயற்சிப்பது பொருத்தமானதாகும்.

அறுதிப் பெரும்பான்மைப் பலம் பெற்ற அரசு பதவியேற்றுள்ளது. சிறுபான்மையின கட்சிகள் சமயோசிதமான முறையில் தமது அரசியலை முன்னெடுப்பதே பொருத்தமானதாகும்.


Add new comment

Or log in with...