திகாமடுல்ல மாவட்டத்தில் 04 முஸ்லிம்கள், 03 பெரும்பான்மையின உறுப்பினர்கள் தெரிவு

தமிழ் மக்கள் மீண்டும் அரசியல் அநாதைகளாகினர்

திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை நான்கு முஸ்லிம் உறுப்பினர்களும் மூன்று சிங்கள உறுப்பினர்களுமாக மொத்தமாக எழுவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் பொதுஜன பெரமுன 1,26,012 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 1,02,274 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43,319 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் தேசிய காங்கிரஸ் 38,911 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.  

அதன்படி பொதுஜன பெரமுரன சார்பில் விமலவீர திசாநாயக்க 63,594 வாக்குகளையும் வீரசிங்க 56,006 வாக்குகளையும் திலக் ராஜபக்ச 54,203 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எச்.எம்.எம்.ஹரிஸ் 36,850 வாக்குகளையும் பைசால் காசிம் 29,423 வாக்குகளையும் தேசிய காங்கிரஸ் சார்பில் ஏ.எல்.எம். அதாஉல்லா 35,697 வாக்குகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முஷர்ரப் 18,389 வாக்குகளையும் பெற்று உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.  

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை. அங்கு அகில இலங்கை தமிழர் மகாசபை சார்பில் போட்டியிட்ட கருணா அம்மான் தரப்பும் எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை.    த.தே.கூட்டமைப்பு 25,255வாக்குகளையும் கருணாஅம்மான் கட்சி 29,379 வாக்குகளையும் பெற்று தோல்வியைத் தழுவியதனால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மீண்டும் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.  

கருணா அம்மான் சார்புக் கட்சி 4,124 வாக்குகளால் த.தே.கூட்டமைப்பை தோற்கடித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் 05 இலட்சத்து 13 ஆயிரத்து 979 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 4,02,344 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 3,85,997 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக பதிவானதோடு 16,347 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

காரைதீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...