உலகில் 160 கோடி சிறுவர்களின் கல்வியை பாதித்த கொரோனா

கொவிட் 19 நோய்ப் பரவல் பொருளாதாரத் தாக்கம் காரணமாக சுமார் 24 மில்லியன் சிறுவர்கள் அடுத்த வருடம் பாடசாலைகளுக்கு வராமலே இருந்து விடலாம் என்று ஐக்கிய நாடுகளின் கல்வி தொடர்பான கொள்கைக் குறிப்பு கூறுகிறது. இந்தக் கொள்கைக் குறிப்பு சுருக்கப் பிரதி இந்த வாரம் வெளியிடப்பட்டது.  

கொவிட் 19 காரணமாக உலகம் முழுவதும் 1.6 பில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் உள்ள சிறுவர்களே இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில வறிய நாடுகளில் ஆரம்ப மட்ட கல்வியில் ஈடுபட்டுள்ள நாடுகளில் 86 சதவீத சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

அதேவேளை கொவிட் 19 நோய்த் தொற்றின் பொருளாதார பாதிப்பு காரணமாக பாடசாலைகளுக்கு சென்று அடுத்த வருடம் தமது கல்வியைத் தொடர முடியாத சிறுவர்களில் பெண் பிள்ளைகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று மேற்படி கல்வி தொடர்பான கொள்கைக் குறிப்பு மேலும் கூறுகிறது.  

நோய்த் தொற்று காரணமாக பாடசாலைகள் நீண்ட காலம் மூடப்பட்டுள்ள நிலையில், சிறுவர் திருமணங்கள், குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே ஏற்படக் கூடிய கர்ப்பம் மற்றும் பால் அடிப்படையிலான வன்முறைகள் காரணமாகவே பெண் பிள்ளைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.  

பாடசாலைகளுக்குச் செல்ல முடிந்தாலும் கூட, படிக்கும் திறன் வெகுவாகக் குறைந்து விடும் என்று மேற்படி கல்வி தொடர்பான கொள்கைப் பிரகடனம் மேலும் கூறுகிறது. மூன்று மாத கால பாடசாலை மூடலானது மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 72 சதவீதத்தினரின் படிக்கும் திறனைக் குறைந்து விடக் கூடும்.  

இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறிப்பிட்ட மாணவர்களின் ஆயுட் காலத்தில் 16 ஆயிரம் டொலர்களை இழக்கும் நிலைக்க ஒப்பானதாகும். உலகளாவிய ரீதியில் இந்த பாதிப்பு 10 மில்லியன் டொலர்கள் அளவில் இருக்கக் கூடும் என்று அந்த கொள்கைக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.  

கல்விக்கான செலவுகள் அதிகரிக்கப்பட வேண்டியதுடன் பாதுகாக்கப்படவும் வேண்டும். கல்வியானது சர்வதேச ஒற்றுமை முயற்சிகளின் மையமாகும். கடன் முகாமைத்துவம், உலகளாவிய மனிதாபிமான முறையீடுகள் மற்றும் அதிகாரபூர்வ அபிவிருத்தி உதவிகளுக்கு கல்வி முக்கியமானது என்று ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியா குட்டெரட் மேற்படி கொள்கைக் குறிப்பு வெளியீட்டின் போது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   


Add new comment

Or log in with...