நுவரெலியா மாவட்டத்தில் 75 சதவீதமான வாக்குப்பதிவு

நுவரெலியா மாவட்டத்தில் நேற்றைய தினம் வாக்களிப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றதாகவும் மாவட்டத்தில் 75 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

498 வாக்களிப்பு நிலையங்களில் 5,77,717 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வழமையாக நுவரெலியா காமினி தேசிய பாடசாலையிலேயே வாக்குகள் என்னப்படும்.ஆனால் இம்முறை நான்கு இடங்களில் வாக்குகள் கணக்கிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் 45 வாக்கெண்ணும் நிலையங்களும் நுவரெலியா தொழில்நுட்ப கல்லூரியில் 15 வாக்கெண்ணும் நிலையங்களும் நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் 35 வாக்கெண்ணும் நிலையங்களும் தபால் மூல வாக்குகளை கணக்கிடுவதற்காக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் 10 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.மொத்தமாக 95 வாக்கெண்ணும் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 

இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 13 சுயேச்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.8 பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 275 பேர் போட்டியிடுகின்றனர்.

இன்று மாலை 4.00 மணியளவில் மாவட்டபெறுபேறுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாளை விருப்பு வாக்குகளின் விபரம் வெளியிடப்படுவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவிக்கின்றார்.

நுவரெலியா தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...