இஸ்ரேல் இராணுவம் சிரிய எல்லைப் பகுதியில் தாக்குதல்

கோலன் குன்றின் சிரிய எல்லை வேலிக்கு அருகில் வெடி பொருட்களை வைக்க முயன்ற போராளிகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று குறிப்பிட்டது.

“எல்லைப்புற புறக்காவல் ஒன்றுக்கு அருகில் ஞாயிறு இரவில் குறித்த குழுவை படையினர் கண்டதை அடுத்து போர் விமானங்களின் உதவியோடு நான்கு பயங்கரவாதிகள் கொண்ட அந்தக் குழுவை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது” என்று இஸ்ரேல் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

எனினும் இது பற்றி சிரிய தரப்பில் இருந்து உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

டமஸ்கஸ் புறநகர் பகுதியில் லெபனான் சியா போராட்டக் குழுவான ஹிஸ்புல்லா உறுப்பினர் ஒருவர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல் மற்றும் சிரிய எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் லெபனான் மற்றும் சிரியா எல்லையில் இஸ்ரேல் படைகளை குவித்துள்ளது.

“சிரியாவில் இடம்பெரும் அனைத்திற்கும் சிரிய அரசே பொறுப்பேற்க வேண்டும். இஸ்ரேல் இறைமை மீதான எந்த ஒரு அத்துமீறல் தொடர்பிலும் பொறுமைகாக்கப்போவதில்லை”என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...