வலையில் சிக்கி மரணமடைந்த சிறுத்தை பிரேத பரிசோதனைக்கு

வலையில் சிக்கி மரணமடைந்த சிறுத்தை பிரேத பரிசோதனைக்கு-Leopard Dead-Nawalapitiya

மிருக வேட்டை தொடர்பில் உடன் விசாரிக்க பிரதமர் உத்தரவு

நாவலப்பிட்டி, மாப்பாகந்த பகுதியில் உள்ள காடொன்றின் கோப்பி மரமொன்றில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுத்தை, பிரேத பரிசோதனைக்காக வனஜீவராசிகள் அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த அரிய வகை சிறுத்தை தொடர்பில், நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்ததற்கு அமைய, நேற்றையதினம் (20) பிரேத பரிசோதனைகளுக்காக, மினிப்பே மிருக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாக, நல்லதண்ணி வனஜீவராசிகள் அதிகாரிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வலையில் சிக்கி மரணமடைந்த சிறுத்தை பிரேத பரிசோதனைக்கு-Leopard Dead-Nawalapitiya

நாவலப்பிட்டி, மாப்பாகந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டமொன்றில் வேட்டையாடுபவர்களால் வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய குறித்த சிறுத்தை, அங்கிருந்து கோப்பி மரமொன்றில் ஏறி தப்பிக்க முயற்சித்த நிலையில், மரத்தின் கிளையில் சிக்கி தொங்கி, இறுகிய நிலையில் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் உயிரிழந்துள்ளதாக, வனஜீவராசிகள் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

நன்கு வளர்ந்த இறந்த பெண் சிறுத்தைக்கு 7 வயது இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வருடத்தில் மத்திய மலைநாட்டில் மாத்திரம் கருஞ்சிறுத்தை உள்ளிட்ட 5 சிறுத்தைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களை கைது செய்ய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் மிருக வேட்டை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...