ரிஷாட்டுக்கு எதிரான விசாரணையை தேர்தலின் பின் மேற்கொள்ளவும்

ரிஷாட்டுக்கு எதிரான விசாரணையை தேர்தலின் பின் மேற்கொள்ளவும்-Election Commission Requested Acting IGP to Hold the Inquiries Against Rishad Bathiudeen Until Aug 10

- தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணையினை பிற்போடுமாறும் அல்லது 10. 08. 2020 இன் பின்னர் மேற்கொள்ளுமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் இருவரும் இணைந்து, கையொப்பமிட்டு பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளனர்.

ஜூலை 15 ஆம் திகதியிடப்பட்டு இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் மீது ஆணைக்குழு எடுத்துள்ள இந்தத் தீர்மானத்தினை ஜனாதிபதியினது செயலாளருக்கும் மற்றும் சட்டமா அதிபருக்கும் அறிவிப்பதாக, ஆணைக்குழுவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீனால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு செய்யப்பட்ட முறைப்படு தொடர்பில்,  இன்று (2020. 07.15) நடைபெற்ற ஆணைக்குழுவின் கூட்டத்தில் கவனத்தில் எடுக்கப்பட்டது.

வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டினது சாராம்சமானது, 2019. 04. 21 இல் நடந்த சோகமான நிகழ்வு தொடர்பாக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னர் தேவையான சான்றுகளினை ஏற்கனவே அவர் வழங்கியுள்ளார். 2019. 10. 23 ஆம் திகதிய 183 ஆம் இலக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதாவது, அவர்களால் மேற்கொள்ளப்பட்டபட விசாரணைகளின் முடிவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், 2019.04.21 இல் நடைபெற்ற குண்டுத்தாக்குதலுக்கும் மற்றும் எந்தவிதமான பயங்கரவாத செயற்பாடுகளுடனும் எந்தவிதமான தொடர்பும் வெளிப்படுத்தப்படவில்லை என்பதை குறிப்பிட்ட அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ரிஷாட் பதியுதீன் மேலும் ஆணைக்குழுவில் மேற்கொண்ட தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது, குறிப்பிட்ட பயங்கரவாத சம்பவம் நடைபெற்று ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், குற்றவியல் விசாரணை பிரிவுத் தலைமை காரியாலத்திற்கு (CID) மீண்டும் மீண்டும் அவரை வருமாறு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு பல தடவைகள் குற்றவியல் விசாரணைப் பிரிவுத் தலைமை அலுவலகத்துக்கு அழைப்படுவதன் மூலம், தனது தேர்தல் பரப்புரைகள் மற்றும் செயற்பாடுகளுக்கு தடங்கல் விளைவிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சி. ஐ. டி யினரின் இச் செயற்பாட்டினைப் பார்க்கின்றார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இலங்கையின் பிரதான அரசியல் கட்சி ஒன்றின் தலைவராவார். இவருடைய இந்தக் கட்சியில் நாட்டின் பல மாவட்டங்களிலும் 3௦ வேட்பாளர்களுக்கு மேல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதனால், கட்சித் தலைவர் என்ற வகையில், நாட்டில் எல்லா பாகங்களுக்கும் அடிக்கடி இக்காலப் பகுதியில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. குற்றவியல் விசாரணைப் பிரிவு தலைமை அலுவலகத்தில் அவருடைய தேர்தல் பணிகளுக்கு தடங்கலை ஏற்படுத்தும் வகையில், இக் காலப் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை அழைப்புக்கள் ஜனநாயக பாரம்பரியத்தினையும், சுதந்திரத்தினையும் சிதைப்பதாக அமைந்து விடுகின்றது.” என்று தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொழும்புக்கு ஒருதடவை பயணிக்கும் போது, மூன்று நாட்கள் அவரது தேர்தல் பணிகளிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதாகவும் அவர், மேலும் புகாரிட்டுள்ளார்

தேர்தலினை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தும் நோக்கில், தேர்தல் ஆணைக்குழுவானது, அவரது முறைப்பாட்டினை மிகக் கவனமாக கருத்திலெடுத்து, ஏகமனதாக மேற்கொண்டுள்ள தீர்மானத்தின் படி, குறிப்பிட்ட விடயம் தொடர்பில் உங்களால், அவர்மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணையினை பிற்போடுமாறும் அல்லது 10. 08. 2020 இன் பின்னர் மேற்கொள்ளுமாறும் தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொள்கின்றது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டின் மீது ஆணைக்குழு எடுத்துள்ள இந்தத் தீர்மானத்தினை, கெளரவ ஜனாதிபதியினது செயலாளர் அவர்களுக்கும் கெளரவ சட்டமா அதிபர் அவர்களுக்கும் அறிவிப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிடுவது யாதெனில், ஓர் அரசியல் கட்சியின் முக்கியமான உயர் பதவிகளில் இருக்கின்ற குறிப்பிட்ட வேட்பாளர்களினது தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாகக் கருதுகின்ற இவ்வாறான விசாரணைகள், அவரது தேர்தல் பணிகளினை தடுக்கின்ற போது, தேர்தல் ஆணைக்குழுவானது, குறிப்பிட்ட நபர் மீதான விசாரணைகளை பிற்போடுமாறு பொலிஸாருக்கு இதற்கு முன்னர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அக்கோரிக்கைகள் பொலிஸாரினால் கௌரவப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அவ்வாறான பொலிஸாரின் நடவடிக்கைகளுக்காக எமது தேர்தல் ஆணைக்குழு எப்பொழுதும் பொலிஸாருக்கு நன்றியுடையவர்களாக இருந்திருக்கின்றது" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரிஷாட்டுக்கு எதிரான விசாரணையை தேர்தலின் பின் மேற்கொள்ளவும்-Election Commission Requested Acting IGP to Hold the Inquiries Against Rishad Bathiudeen Until Aug 10


Add new comment

Or log in with...