அமெரிக்க பிரபலங்களின் ட்விற்றர் கணக்குகளை பதம் பார்த்த ஹெக்கர்கள் | தினகரன்

அமெரிக்க பிரபலங்களின் ட்விற்றர் கணக்குகளை பதம் பார்த்த ஹெக்கர்கள்

அமெரிக்க பிரபலங்களின் ட்விற்றர் கணக்குகளை பதம் பார்த்த ஹெக்கர்கள்-Bitcoin Scam-Twitter Accounts Hacked

அமெரிக்க பிரபலங்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் சிலரின் ட்விற்றர் கணக்குகள் இணைய வழி தாக்குதலுக்கு உள்ளாகின.

அமெரிக்க பில்லினியர்களான எலன் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ் ஆகியோரின் டிவிற்றர் கணக்குகளும், அமெரிக்க அரசியல் பிரபலங்களான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஜொய் பிடன் அதே போன்று அப்பிள் நிறுவனம் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தப்பட்ட டிவிற்றர் கணக்கள் இவ்வாறு ஹெக் அல்லது ஊடுவல் செய்யப்பட்டன.

இதன்போது, குறித்த ட்விற்றர் கணக்குகளை வைத்திருப்பவர் போல், அதிலிருந்து பதிவுகளும் இடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பிட்கொயின் ஸ்கேம்` (Bitcoin scam) என தெரிவிக்கப்பட்டுள்ள இந்த ஹெக்கிங் சம்பவத்தில் 'பிட்காயின்' எனப்படும் இணைய வழி பயன்பாட்டில் உள்ள கிரிப்டோ கரன்சிகளை அனுப்புமாறு கோரப்பட்டது.

"எல்லோரும் என்னிடம் பணம் வழங்க சொல்லி கேட்கிறார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. பின்வரும் பிட்கொயின் முகவரிக்கு நீங்கள் 1,000 டொலர்கள் அனுப்பினால் நான் உங்களுக்கு 2,000 டொலர்கள் திரும்பி அனுப்புவேன்" என முகவரி ஒன்று வழங்கப்பட்டு பில்கேட்ஸ் கணக்கிலிருந்து ட்வீற் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த ட்வீட்டுகள் பதியப்பட்ட சில நிமிடங்களில் ட்விற்றர் நிறுவனத்தினாலேயே அழிக்கப்பட்டிருந்தன.

உடனடியாக செயற்பட்ட ட்விற்றர் நிறுவனம், `வெரிபைட்` (Verified) கணக்குகள் எனப்படும் உறுதிப்படுத்தப்பட்ட நீல நிற டிக்குகள் கொண்ட கணக்குகள் பலவற்றை ட்வீட் செய்யவிடாமல் இடைநிறுத்தியது

கடவுச்சொல்லை மாற்றியமைப்பதற்கான கோரிக்கைகளை அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதன் பின்னர் ஹெக் செய்யப்பட்ட பல ட்விற்றர் கணக்குகளால், தற்போது ட்வீற் செய்யமுடியும் எனத் தெரிவித்த ட்விற்றர் நிறுவனம், இந்தச் சம்பவம் தொடர்பாக தாங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

ஹெக் செய்யப்பட்ட கணக்குகளில் பதியப்பட்ட ட்வீற்கள் காரணமாக, ஒரு சில நிமிடங்களில் ஒரு இலட்சம் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நன்கொடைகள் செலுத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. காரணம், ஹெக்க செய்யப்பட்ட இந்த டிவிற்றர் கணக்குகள் பல மில்லியன் பின்தொடர்வோரைக் கொண்டுள்ளன என்பதேயாகும்.


Add new comment

Or log in with...