கந்தகாட்டில் 25 அதிகாரிகள் உட்பட 532 பேர் தொற்றாளராக பதிவு | தினகரன்


கந்தகாட்டில் 25 அதிகாரிகள் உட்பட 532 பேர் தொற்றாளராக பதிவு

நேற்றுவரை 3000 PCR பரிசோதனை 

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொவிட் - 19 தொற்று கொத்தணியில் 532 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதோடு அவர்களில் 25 பேர் அதிகாரிகள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க நேற்று தெரிவித்தார். இந்த கொத்தணி தொற்று பதிவாக ஆரம்பித்ததைத் தொடர்ந்து நேற்று வரையும் சுமார் 3000 பேர் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொவிட் - 19 தொற்று பதிவாகத் தொடர்ந்து எழுந்துள்ள நிலைமை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 'கொரோனா தொற்று தொடர்பிலான உண்மைத் தகவல்கள் மறைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அவ்வாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் உண்மைத் தகவல்களை மறைப்பதில்லை. தகவல்களை 

மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. அவற்றை மறைப்பதால் அரசாங்கத்திற்கோ மக்களுக்கோ எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதுமில்லை என்றும் அவர் கூறினார். 

இதேவேளை சுமார் 12 ஆயிரம் மக்கள் வாழும் இராஜாங்கணை பிரதேசத்தில் இக்கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக அப்பகுதி தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது. என்றாலும் ஏனைய 

பிரதேசங்களில் இவ்வைரஸ் தொற்று தற்போது கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது என்றும் குறிப்பிட்டார். 

கொரோனா பரவுதல் தொடர்பில் பல்வேறுவிதமான பொய்த் தகவல்கள் சமூகத்தில் பரப்பப்படுகின்றன. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு பதற்றமடையாது இவ்வைரஸ் தொற்றைத் தவிர்த்து கொள்வதற்காக சுகாதார வழிகாட்டல்களான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகழுவதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார பழக்க வழக்கங்களை உச்சளவில் பேணுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...