சிறைச்சாலைக்குள் பொதிகளை வீசிய குற்றம்; 15 பேர் கைது | தினகரன்

சிறைச்சாலைக்குள் பொதிகளை வீசிய குற்றம்; 15 பேர் கைது

களுத்துறை சிறைச்சாலையில் ஹெரோயின் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட இரு பொதிகளை வீசிய இருவர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (14) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜாவத்தை பிரதேசத்தில் களுத்துறை சிறைச்சாலைக்கு அருகில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சிறைச்சாலை மதிலிற்கு மேலாக பொதிகளை வீசிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த 02 பொதிகளையும் சோதனையிட்டபோது, அவற்றிலிருந்து 02 கையடக்கத் தொலைபேசிகள், 02 சாஜர்கள் (Charger), 01 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின், ஒரு கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின், 19 புகையிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, குறித்த இரு சந்தேகநபர்களுடன் தொடர்புபட்ட மேலும் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபர்கள் தங்களது உடமையில் வைத்திருந்த 13 கிராம் 730 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபர்கள் களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இச்சந்தேகநபர்களை இன்று (15) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


Add new comment

Or log in with...