வயல் வரம்புப் பயிர்ச் செய்கை வெற்றி: நாடெங்கும் விஸ்தரிக்க நடவடிக்கை | தினகரன்


வயல் வரம்புப் பயிர்ச் செய்கை வெற்றி: நாடெங்கும் விஸ்தரிக்க நடவடிக்கை

தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ், மாவட்ட அரசாங்க அதிபரின் நெறிப்படுத்தலில், மத்திய மற்றும் மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அம்பாறை மாவட்டத்தில் வயல் வரம்புப் பயிர்ச் செய்கை களைகட்டி வருகிறது.

வயலிலுள்ள வரம்புகள் இதுவரை காலமும் புல் முளைத்து வெறுமனே நடைபாதையாக காட்சியளித்தன. தற்சமயம் அவ்வரம்பையும் பயன்தரு முறையில் பயன்படுத்தலாம் என்பதை விவசாயத் திணைக்களம் ஆலோசனை வழங்கியதன் பேரில் அச்செய்கை பாரிய பலனைத் தர ஆரம்பித்துள்ளது.

வயல் வரம்பில் பயிரிடப்படும் கத்தரி, வெண்டி, கீரை, பயற்றை, நெடிய பயற்றை போன்ற பல்வேறு வகை மரக்கறிப் பயிர்கள் இன்று அறுவடையாகி வருகின்றன.

இப்பயிர்களுக்கென நீர் ஊற்ற வேண்டிய தேவையோ, உரம் இட வேண்டிய அவசியமோ இல்லை. வயலுக்கு இடும் நீர், உரம் இதற்கும் பயன்படுகிறது. பராமரிப்பும் இலகு. ஆடு ,குரங்கு, மயில் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பது மட்டுமே சவாலாக உள்ளது. இதற்கும் ஒரு தீர்வு கண்டு விட்டால் விவசாயிகள் மிகுந்த நன்மையடைவார்கள்.

அதன் ஒரு வெற்றிகரமான அறுவடை நிகழ்வு நிந்தவூர் பிரதேசத்தில் விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் இயற்கையான  சூழலில் நடைபெற்றது.நிந்தவூர் நடுக்குடி கிழல்கண்ட வயலில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தொழினுட்ப உதவியாளர் எம்.எம்.எ.நஜாத் ஏற்பாட்டாளராக திகழ்ந்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலய உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரனும்  கௌரவ அதிதியாக தலைமைப்பீட விவசாய போதனாசிரியர் எஸ்.பரமேஸ்வரனும் கலந்து கொண்டனர்.

அங்கு கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மரக்கறி பயிர் விதைகள் வழங்கப்பட்டதுடன், விவசாய தொழில்நுட்ப ஆலோசனைகளும் அதிதிகளால் வழங்கப்பட்டன.

இச்செய்கை விவசாயிகள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. விவசாயிகள்  விவசாய திணைக்கள போதனாசிரியர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினர்.

வயல் வரம்பு பயிர்ச் செய்கை வெற்றியளித்துள்ளதால் இந்நடைமுறை நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் அதனை விஸ்தரிக்கப்பட விவசாயத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வி.ரி.சகாதேவராஜா (காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...