நாட்டில் வேறெங்கும் இல்லாத தேர்தல் சட்ட மீறல்கள் வடக்கில் பதிவாகியுள்ளன | தினகரன்

நாட்டில் வேறெங்கும் இல்லாத தேர்தல் சட்ட மீறல்கள் வடக்கில் பதிவாகியுள்ளன

மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டு

தேர்தல் கடமைகளில் இராணுவத்தினரோ, முப்படையினரோ ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

மேலும் பொது மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி வாக்குகளை அளிப்பதற்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று  விஜயம் மேற்கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர், பிரதித் தேர்தல்கள் ஆணையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

கலந்துரையாடலின் பின்னர், நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக பல விடயங்கள் கிடைக்கப்பட்டுள் ளன. பொதுப் பாதைகள் மீது வேட்பாளர்களின் புகைப்படம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளமை புகைப்படங்கள் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. உண்மையில், இலங்கையில் வேறு எங்கும் காணப்படாத தேர்தல் சட்ட மீறல்களாகும். இது தண்டனைக்குரிய குற்றம். இது தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்குமாறு, குறித்த முறைப்பாட்டு முகாமைத்துவப் பிரிவிற்கும், பொலிஸாருக்கும் அறிவுறுத்தவுள்ளோம்.

பொதுப் பாதைகளில் வேட்பாளர்களின் இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் பொறிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். பொது மக்களின் வீடுகளிற்கு முன்னால், சின்னங்கள் மற்றும் இலக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை காட்சிப்படுத்த வேண்டாம்.

அவ்வாறு வேட்பாளர்களினால் காட்சிப்படுத்தபடுவதை பொது மக்கள் தபால் அட்டைகள் மூலம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யலாம். பாதை திறப்பு விழாக்களை பயன்படுத்தி  அரசாங்கத்தின் நிதியைப் செலவிட்டு, தமது கட்சியை அல்லது வேட்பாளரை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்கள் என முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.

அதன்போது, அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கண்காணிக்க உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக தவிர்க்குமாறும், வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்குரிய முழு ஆதாரங்களையும் சேகரிக்கக் கோரியுள்ளோம்.

முக்கியமாக இந்த தேர்தல் ஏனைய தேர்தல்களை விட, கொவிட் -19 என்ற வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேர்தலாக இருக்கின்றது. இங்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கிருமித் தொற்று நீக்குதல், இவை அனைத்து இடங்களிலும் அடிக்கடி நடத்த வேண்டி இருப்பதனால், இதனை முழுமையாகப் பின்பற்றுமாறு, தேர்தல்கள் அலுவலகர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்குரிய பூரண ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு சூழ்நிலையிலும், இந்த தேர்தலை நடத்துவதென்பதில் முழு ஈடுபாட்டில் இருக்கின்றோம்.

ஏனெனில், இந்த நாட்டிற்கு ஒரு பாராளுமன்றம் தேவை. ஜனநாயகம் இந்த நாட்டில் வேண்டுமாக இருந்தால், இங்கு ஒரு பாராளுமன்றம் இருக்க வேண்டும். பாராளுமன்றம் இருக்க வேண்டியதன் அவசியம் காரணமாக, எதிர்வரும் தேர்தலை குறித்த தினத்தில் நடத்துவதற்கான, ஏற்பாடுகள் மற்றும் முஸ்தீபு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...