வாழைச்சேனை கரையோர வீதி அமைக்கப்படுவது எப்போது?

கடந்த  ஆட்சிக் காலத்தில் ‘கமநெகும’ எனும் பெயரில் கிராமங்கள் நாட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டன. ’திவிநெகும’ எனும் பெயரில் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.‘புறநெகும’ எனும் பெயரில் பெருந்தெருக்கள், வீதிகள், பாலங்கள் அமைக்கப்பட்டன.

அந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்கள் என்று அரசாங்கம் அறிவித்திருந்தாலும் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மையளிக்கும் வகையில் பல திட்டங்களை சரியாக முன்னெடுக்கப்படவில்லை என்ற கருத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு –திருகோணமலை பிரதான வீதியை மக்கள் பாவனைக்காக திறந்து விட்ட அரசாங்கம் காயாங்கேணி, பனிச்சங்கேணி, ஓட்டமாவடி பாலங்கள் மற்றும் வெருகல் இறங்குதுறை பாலம் என்பனவற்றை புனரமைப்பு செய்தது.

திருகோணமலைக்கு குறுகிய நேரத்திற்குள் செல்லக் கூடிய பாதைகள்   அமைக்கப்பட்டன.

மட்டக்களப்பு  மாவட்டத்தில் உள்ள வாழைச்சேனையில் அமையப் பெற்றுள்ள ஆற்றங்கரையானது  விலைமதிக்க முடியாத இயற்கை வளமாகும்.இது வாழைச்சேனை மக்களுக்கு கொடையாகும். ஏனெனில் இலங்கையில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு தங்கள் ஆழ்கடல் இயந்திரப் படகை ஆற்றின் ஊடாக கடலுக்குள் கொண்டு செல்லும் மிக இலகுவான நீர்வழிப் பாதை வாழைச்சேனையில் மாத்திரம்தான் உள்ளதாக மீனவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு  மீன்பிடி வள்ளங்களை தங்கள் வீடுகளுக்கு முன்பாகவே நிறுத்தி விட்டு தேவைக்கேற்ற வகையில் அவற்றை கடலுக்கு தொழிலுக்காக கொண்டு செல்லும் வசதி   இந்த மீனவர்களுக்கு மட்டுமே உண்டு.

கிழக்கில் மீனவர்கள் தங்கள் படகுகளை  கடலோரமே நிறுத்த வேண்டும்.ஆனால் வாழைச்சேனையில் அவ்வாறில்லை.கடலோடு இணைந்த ஆற்றிலேயே படகுகள் நிறுத்தப்படுவதால் தொழிலாளர்களுக்கு சிரமங்கள் இல்லை.

ஆனால் வருடந்தோறும் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் இப்பகுதி பாரிய மண்ணரிப்புக்கு உள்ளாகி வருகின்றது.கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் இப்பகுதியில் உள்ளவார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.ஆற்றங்கரையோரத்தை அண்டியுள்ள பல வீடுகள் மற்றும் கட்டடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் குடிநீர்க் கிணறுகளும் பாதிக்கப்பட்டன.

ஆனால் அன்றிருந்த அரசியல்வாதிகள் வாழைச்சேனை-கோறளைமத்திய பிரதேசத்தை சுனாமியினால் பாதிக்கப்படாத பிரதேசமாக அறிவித்திருந்தார்கள்.இது வாழைச்சேனை மக்களுக்கு பாதிப்பு ஆகும்.

அங்கு கரையோர வீதி அமைக்கப்படுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளும் அளவுக்கு வாழைச்சேனை மீனவக்குடும்பங்களுக்கு தெளிவு இல்லை.  கிழக்கின் கரையோரப் பகுதிகளில் எல்லாம்  வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாழைச்சேனையிலும் அமைக்கப்பட்டிருக்க  வேண்டும்.காரணம் கிழக்கில் ஆகக் கூடிய ஆழ்கடல் இயந்திர வள்ளங்களைக் கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈ டுபடும் மீனவர்கள் இங்குதான் வாழ்கின்றார்கள்.

வாழைச்சேனை நகரமயமாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு அழகியதொரு சூழலுடன் கூடிய அபிவிருத்தியை கண்டிருக்கலாம்.சுகாதாரமானதும் சுத்தமானதுமான பகுதியாக வாழைச்சேனை 4ம் வட்டாரத்தை பாதுகாத்திருக்க முடியும். இக்கரையோர வீதி அமைக்கப்பட்டிருந்தால் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பகுதியாக வாழைச்சேனையை மாற்றியிருக்க முடியும்.மீன்பிடிக் கைத்தொழிலுடன் கூடிய வளம் பெற்ற பிரதேசமாக மாற்றியிருக்க முடியும்.

அதேவேளை கோறளை மத்திய வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குப்பை மற்றும் கழிவுகளால் அழகிழந்து காணப்படும் பிரதேசமாக வாழைச்சேனை ஆற்றங்கரை பிரதேசம் விளங்குகின்றது.ஆழ்கடல் மீன்கழிவுகள் இங்கு வீசப்படுகின்றன.படகுகளின் சேதமடைந்த உதிரிப் பாகங்கள், அதனோடு இணைந்த கழிவுகள் இங்குதான் வீசப்படுகின்றன.எனவே முறையான கழிவகற்றல் இந்தப்பகுதியில் நடக்க வேண்டுமென்றால் வாழைச்சேனை ஆற்றங்கரையோரம் அழகுபடுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.அதற்கான ஒரேயொரு தீர்வு வாழைச்சேனை கரையோர வீதி அமைக்கப்படுவதேயாகும்.

எனவே  அரசியல்வாதிகள் கரையோர வீதி அமைப்பு குறித்து நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

யூ.எல்.எம். ஹரீஸ் (வாழைச்சேனை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...