சிறிகொத்தா அதிகாரத்துக்காகவே ரணில், சஜித் தேர்தலில் போட்டி | தினகரன்


சிறிகொத்தா அதிகாரத்துக்காகவே ரணில், சஜித் தேர்தலில் போட்டி

அமைச்சர் பந்துல குணவர்த்தன பேட்டி

‘யுத்தத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பொருளாதார யுத்தத்தில் வெற்றி பெறுவது பெரிய விடயமல்ல’ என்று கூறுகிறார் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன.

கேள்வி: தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆயத்தம் எவ்வாறுள்ளது?

பதில்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது மக்கள் பெரும் ஈர்ப்பினை கொண்டுள்ளார்கள். குறுகிய காலத்துக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிற்கு செய்த சேவைக்கு மக்கள் நன்றிக் கடன் பட்டுள்ளார்கள் என எண்ணுகின்றேன். அதே போல் அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் பேருடன் மேலதிகமாக இம்முறை ஐக்கிய தேசிக் கட்சியைச் சேர்ந்த அநேகமானோரும் ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம் கொவிட் 19ஐ கட்டுப்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைகளாகும்.

கேள்வி: பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எவை?

பதில்: மத்திய வங்கியில் அதிகளவு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமான பிணைமுறி மோசடியை சமூகத்துக்கு நாமே அறியத் தந்தோம். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வந்து 100 நாட்கள் புரட்சி என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்டோரையும் இணைத்துக் கொண்டு  நாட்டை ஆட்சி செய்த காலத்தில்தான் இந்த களவு மேற்கொள்ளப்பட்டது. அது 2015 பெப்ரவரி 28ம் திகதியாகும். அந்த அரசாங்கத்தில் தொடர்புடையவர்கள் இந்த அளவு குறித்து எதுவும் பேசவில்லை.   எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட நாம் பட்டப்பகலில் மத்திய வங்கியைச் சுற்றி வளைத்தோம். அப்போது மத்திய வங்கிக்குள் சென்று இந்த மோசடி நடைபெற்ற விதத்தை கண்டுபிடித்தது  நான்தான். நாம் மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடினோம். டி.யூ. குணசேகரவின் தலைமையிலான குழு நல்ல அறிக்கையொன்றை தயாரித்தது. கோப் குழுவின் அறிக்கையொன்று வெளிவந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைத்த ஜனாதிபதி ஆணைக்குழுவே  பல விடயங்களை வெளிக்கொண்டு வந்தது. அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்கு தொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேள்வி: மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வர நல்லாட்சி அரசாங்கத்தால் முடியாமல் போனது. நீங்கள் அதற்காக எடுத்த நடவடிக்கைகள் எவை?

பதில்: இலங்கை அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் மத்திய வங்கி முன்னாள் ஆளுநரை ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கேட்டுள்ளது. அதனை அந்த அரசாங்கம் உத்தியோகபூர்வ மட்டத்தில் ஏற்றுக் கொண்டுள்ளது. அவர் தனது முகவரி, பெயர் என்பவற்றை மாற்றியுள்ளதாகக் கூறப்படுகின்றது. சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தி,  நீதியை நிலைநாட்டி குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்போம்.

கேள்வி: நாட்டின் வளத்தைப் பாதுகாக்க விசேட திட்டங்கள் உள்ளதா?

பதில்: ஆம் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தலைமை தாங்கினார். அவர் சிறந்த பௌத்தர். அதே போல் அனைத்து மக்களையும் நேசிப்பவர். பொதுமக்களின் சொத்துகளைக் கொள்ளையடிப்பவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்காகவும், களவுகள் இல்லாத இலங்கையை உருவாக்கவும் ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும். இவ்வாறான ஆணைக்குழுவொன்றை அமைத்து பொதுமக்களின் சொத்துகளை கொள்ளையடித்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

கேள்வி: ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அது தொடர்பிலான உங்களது கருத்தென்ன?

பதில்: ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளன. அதன் அமைச்சரவையில் இருந்த அனைவரும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். அவர்கள் தேசிய பாதுகாப்பை வழங்க முடியாதவர்கள் என சரித்திரத்தில் பேசப்படுவார்கள். அவ்வரசாங்கத்திலிருந்த அமைச்சரான விஜேதாச ராஜபக்ஷ மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவம் மற்றும் சஹ்ரானின் அடிப்படைவாத நடவடிக்கைகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் அது குறித்து யாரும் அக்கறை எடுக்கவில்லை. அதனால் தாக்குதலை தடுக்க முடியாமல் போனது. 277 உயிர்கள் பலியாகின. 2015, 2016, 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் இத்தாக்குதல் காரணமாக மேலும் பாதிப்படைந்தது.

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சியால் தற்போதைய அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சி இந்நாட்டில் பிரபல கட்சியாகும். தற்போது அக்கட்சி துண்டு துண்டாக உடைந்து போயுள்ளது. தற்போது இவர்கள் போட்டியிடுவது தேர்தலில் வெற்றி பெற அல்ல. ஐ.தே.கட்சித் தலைவர் சிறிகொத்த அதிகாரத்தை தக்க வைக்கவே தேர்தலில் போட்டியிடுகிறார். அதே போல் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பிரதித் தலைவரும் சிறிகொத்தவில் அதிகாரத்தைக்  கைப்பற்றவே போட்டியிடுகிறார். இவர்களிடம் நாட்டை கட்டியெழுப்ப எவ்வித திட்டங்களும் இல்லை. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பயங்கரவாத யுத்தத்தை வெற்றி கொண்டது போன்று பொருளாதார யுத்தத்திலும் வெற்றி பெறுவார்கள்.

கேள்வி: கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த வெளிநாட்டு உதவிகள் கிடைத்தன. அவை தொடர்பாக சரியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனவே?

பதில்: கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய அடிப்படை நடவடிக்கைகளுக்காக பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கடந்த மாதம் வரை இலங்கைக்கு வழங்கிய கடன், நன்கொடைகள் மற்றும் பொருள் உதவிகள் பற்றிய அனைத்தும் பற்றிய விரிவான அறிக்கையை நிதி, பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை குழுவிற்கு சமர்ப்பித்துள்ளார்.

கேள்வி: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தில் நோக்கு’ பொருளாதார கொள்கைகள் தொடர்பாக உங்களின் கருத்தென்ன?

பதில்: கோட்டாபய ராஜபக்ஷ நீண்ட காலமாக நாட்டில் பலருடன் கலந்துரையாடி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தைத் தயாரித்தார். நாட்டில் விவசாயம், சேவைகள் போன்று கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, சமூக நலன் போன்ற அனைத்துப் பிரிவுகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் மிக நன்றாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக அதனை செயல்படுத்த கொவிட் 19 தடையாக அமைந்துள்ளது. ஆனால் ஓகஸ்ட் 5ம் திகதி மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கத்தை அமைக்க மக்கள் வாக்குகளை அளித்தால் நிச்சயமாக இரண்டு வருட காலத்துக்குள் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். நாட்டு மக்கள் 05ம் திகதி மிகவும் அக்கறையுடன் வாக்களிப்பு நிலையத்துக்கு செல்வார்கள் என நம்புகின்றேன்.

சுபாஷினி சேனாநாயக்க
(தமிழில்: வீ. ஆர். வயலட்)


Add new comment

Or log in with...