யாழில் ரூ. 7.8 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ். வெற்றிலைக்கேணி, உடுத்துறை பகுதியில் 7.8 மில்லியன் ரூபா பெறுமதியான 52 கிலோ 680 கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று (11) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, இப்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடல் வழியாக இலங்கைக்கு  போதைப்பொருள் கடத்தப்படுவதனை கட்டுப்படுத்தும் வகையில், கடற்படையினர் வழமையான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு சோதனை நடவடிக்கை வெற்றிலைக்கேணி, உடுத்துறை பகுதியில் வடக்கு கட்டளை பிரிவுடன் இணைக்கப்பட்ட கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட டிங்கி படகொன்றையும் சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதையும்  கடற்படையினர் அவதானித்துள்ளனர்

குறித்த டிங்கி படகை கடற்படையினர் சோதனையிட்டபோது, 02 சாக்குகளில் அடைக்கப்பட்ட போதைப்பொருள் பொதிகள் 13 ஐ கண்டுபிடித்துள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவையும் டிங்கி படகையும் மேலதிக விசாரணைகளுக்காக யாழ். விசேட அதிரடிப் படையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

அத்தோடு, தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை யாழ். பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 03 தொன் நிறையுடைய கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...