ஜூலை 13 - 17 வரை மீண்டும் ஒரு வாரத்திற்கு பாடசாலைகள் பூட்டு

ஜூலை 13 - 17 வரை மீண்டும் ஒரு வாரத்திற்கு பாடசாலைகள் பூட்டு--COVID19-Schools Holiday for a Week from July 13-17-Information-Center-at-Ministry of Education

- கல்வியமைச்சில் தகவல் மத்திய நிலையம் நிறுவப்பட்டது
➡️ துரித அழப்பு இல: 1988
➡️ தொலைநகல் இல: 0112785818
➡️ மின்னஞ்சல் [email protected]

நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை (13) முதல் ஒரு வாரத்திற்கு விடுமுறை வழங்க, கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 பரவல் நிலை குறித்து கல்வி அமைச்சு மிகுந்த கவனம் செலுத்தி வருவதற்கமைய, குறித்த முடிவை எடுத்துள்ளதாக, அமைச்சு விடுத்தள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமை மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட சில தவறான செய்திகளின் அடிப்படையில் பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், சந்தேகங்களுக்கும் அச்சத்திற்கும் உள்ளாகியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் சுதந்திரம் மற்றும் தெளிவான மனதுடன் செயல்பட வேண்டும் என்பதால், குழந்தைகளின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைக் கல்வியை செயல்படுத்துவதற்கு உகந்த சூழலை உருவாக்குவது அமைச்சின் பொறுப்பாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் வழிகாட்டல்களைக் கருத்தில் கொண்டு, பாடசாலைத் துறையில் ஏற்படக்கூடிய பாதகமான நிலைமைகளைக் கண்காணிக்க, நாட்டின் அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களுக்கு ஒரு வார கால விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை, ஜூலை 13 திங்கட்கிழமை முதல் ஜூலை 17 வெள்ளிக்கிழமை வரை இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இம்முடிவை அனைத்து தனியார் படசாலைகள், சர்வதேச பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளும் பின்பற்றுமென கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், தபால் வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை உரிய நாட்களில் திறந்து, தபால் வாக்களிக்கும் கடமைகளை முறையாக நிறைவேற்றுவதற்கான விடயங்களை மேற்கொள்வது அதிபர்களின் பொறுப்பாகும் என, கல்வி அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மார்ச் 13ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகள், நான்கு கட்டமாக திறக்க எடுத்த முடிவுக்கமைய, கடந்த ஜூன் 29 ஆம் திகதி மாணவர்கள் தவிர்ந்த அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பாடசாலைக்கு சமூகமளித்தனர்.

இரண்டாம் கட்டமாக, கடந்த வாரம், ஜூலை 06ஆம் திகதி, 2ஆம் கட்டமாக, தரம் 05, 13, 11 ஐச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பமானது.

மூன்றாம் கட்டமாக, எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி தரம் 10, 12 மாணவர்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகவிருந்தது.

4ஆம் கட்டமாக, ஜூலை 27ஆம் திகதி, தரம் 3, 4, 6, 7, 8, 9 மாணவர்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பமாக திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி தரம் 01, 02 மற்றும் முன்பள்ளி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் கல்வியமைச்சினால் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய அனைத்து கல்விப் பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக, கல்வி அமைச்சில், மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் சுகாதார மேம்பாட்டு அலுவலர்களை தொடர்பு கொள்ள தகவல் மத்திய நிலையமொன்று கல்வி அமைச்சினால் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையம் பிரதி பணிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கம் மற்றும் தொலைநகல் இலக்கத்தின் கீழ் செயற்படுகின்து;

துரித அழப்பு இல: 1988
தொலைநகல் இல: 0112785818
மின்னஞ்சல் [email protected]

இந்த இலக்கத்தை தொடர்புகொண்டு, அதிபர்கள், கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்வி அலுவலர்கள் தமது சேவை நிலையத்தினதும் பிரதேசத்தினதும் கொவிட் 19 தொடர்பாக தகவல்களை அனுப்ப முடியும். இந்த தகவல் மத்திய நிலையத்தின் ஊடாக நாட்டின் அனைத்து மாகாண, வலய கோட்டத்துக்குள் வைரஸ் தொற்று பரவல் நிலைமை குறித்து பாடசாலைகளுக்குரிய தகவல்களை திரட்டீக்கொள்வதோடு அந்த தகவல் தொடர்பாக சுகாதார அலுவலர்களுக்கு அறிவித்து சுகாதார பாதுகாப்பை கடைப்பிடிப்பதற்காக அவசிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூலை 13 - 17 வரை மீண்டும் ஒரு வாரத்திற்கு பாடசாலைகள் பூட்டு--COVID19-Schools Holiday for a Week from July 13-17-Information-Center-at-Ministry of Education


Add new comment

Or log in with...