ஐம்பது ரூபா பெற்றுத்தர முடியாதவர்கள் ஆயிரம் ரூபாவை கேலி செய்கின்றனர்

இ.தொ.கா சொன்னதை செய்யும் கட்சி - செந்தில் தொண்டமான்

ஐம்பது ரூபாவை பெற்றுத்தர முடியாதவர்கள், தேர்தல் பிரசாரங்களின் போது ஆயிரம் ரூபாய் பெற்றுத் தரப்படவில்லையென இ.தொ.கா வேட்பாளர்களை குறைகூறி வருகிறார்கள். தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக ஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினையை பேசுபொருளாக கையாண்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்.

ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேலான தொகையை பெற்று தரவேண்டிய பொறுப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உடையது என இ.தொ.காவின் உப தலைவரான செந்தில் தொண்டமான் நேற்று தெரிவித்தார்.

ஐம்பது ரூபாவை பெற்றுத்தர முடியாதவர்கள் இவ்வாறு மக்களை குழப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

உண்மையில் ஆயிரம் ரூபா கடந்த மார்ச் மாதம் எமது கரங்களுக்கு கிடைக்க வேண்டியது ஒன்று. 

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் அவ்விடயம் கைநழுவிப் போனது. ஆனால் இன்றும் அது கைவிடப்படவில்லை.

எமது தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் கண்ட அந்த கனவு நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச,  பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் எனக்கு உறுதிமொழி அளித்துள்ளனர்.

பெருந்தோட்ட கம்பனிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் உண்மையில் பெரும் முன்னேற்றத்தை தந்துள்ளது. அவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒரு காலக்கெடு கொடுத்துள்ளார். அதாவது வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்கு முன்னதாக அவர்களது முடிவை அறிவிக்க வேண்டுமென.

அவ்வாறு முடிவு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்தால் கூட அதற்குரிய மாற்று நடவடிக்கையை இந்த அரசாங்கம் நிச்சயம் எடுக்கும். 

ஆயிரம் ரூபாய் என்பது கனவல்ல, அது நனவாகும் நாள் விரைவில் வரும் என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். எனவே இந்த விடயத்தை வைத்து அரசியல் இலாபம் பெற எவரும் முயல வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.


There is 1 Comment

Add new comment

Or log in with...